ஜூலை 26, 2022

அஞ்சலிக் குறிப்பு - நந்தினி சேவியர்


ழத்து மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் கடந்த 16.09.2021 அன்று காலமானார். தேவசகாயம் சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் 25.05.1949 இல் மட்டுவில் சாவகச்சேரியில் பிறந்தவர். மட்டுவில் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். எழுதுவினைஞராகத் தொழில் புரிந்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்து ஆகியவற்றில் ஈடுபட்டவர்.

1967ஆம் ஆண்டு ‘சூழ்;லாம்பு’ என்ற முதற்கதையுடன் சுதந்திரன் பத்திரிகையூடாகத் தனது இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்தவர். இவருடைய எழுத்துக்கள் மல்லிகை, தாயகம், அலை, புதுசு, இதயம், ஒளி, சுட்டும்விழி, தூண்டி, கலை ஓசை, பூம்பொழில், வானொலி மஞ்சரி, வாகை, கலைமுகம், தலித், சிறுகதை மஞ்சரி, தொழிலாளி, சுதந்திரன், சிந்தாமணி, வீரகேசரி, தினகரன், தினக்குரல், ஈழமுரசு, ஈழநாடு, மாலைமுரசு ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. சென்னையில் நடைபெற்ற தமிழினி மாநாட்டில் பங்கேற்றவர். தனது இலக்கியச் செயற்பாட்டுக்காக அரச மற்றும் சமூக நிறுவனங்களில் பல விருதுகளைப் பெற்றவர். 

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் சங்கம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்,  தேசிய கலை இலக்கியப்பேரவை ஆகியவற்றில் இணைந்து செயற்பட்டவர். இதன் காரணமாக இளமைக் காலம் முதல் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தவர். ஆலய நுழைவுப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். தலித், சுட்டும் விழி, கலைமுகம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ள நந்தினி சேவியரின் நேர்காணல்களுக்கு ஊடாக அவரின் இலக்கிய சமூக அரசியற் செயற்பாடுகளை அறிந்து கொள்ளமுடியும். 

நந்தினி சேவியர் எழுதிய சிறுகதைகள் கட்டுரைகள் ஆகியன “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்”(1993), “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” (2011), “நந்தினி சேவியர் படைப்புகள்”(2014),  “பிடித்த சிறுகதை”(2019) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. அவர் எழுதியவற்றுள் பலவற்றை போர்ச்சூழலின் பல்வேறு சந்தர்ப்பங்களில் இழந்து விட்டதாக தன்வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். அவரின் கதைகள் சாதாரண மனிதர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவன. சமூக நீதியைக் கோருவன. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஏற்படுகின்ற நெருக்கடிகளை அதிகமும் தனது கதைகளில் பதிவு செய்தவர். 

கடந்த ஐம்பது வருடங்களாக வாசிப்பும் எழுத்தும் பேச்சும் செயற்பாடுமாக எம்முடன் வாழ்ந்த மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள், ஈழத்து இலக்கிய வரலாற்றில் எழுத்துக்களால் தனது தடத்தை ஆழமாகப் பதிவு செய்தவர். அவரின் எழுத்துக்கள் தொடர்ந்தும் வாசிக்கப்படவேண்டியவை. தொகுப்பு வடிவம் பெறாத அவரின் படைப்புக்கள் எதிர்காலத்தில் நூலாக்கப்படவேண்டும். அன்னாருக்கு ‘இலக்கிய வெளி’யின் சார்பில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

சு.குணேஸ்வரன்  

இலக்கிய வெளி, இதழ் 2, கனடா.



1 கருத்து:

  1. ..மிக்க மகிழ்ச்சி நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/

    பதிலளிநீக்கு