என்.செல்வராஜா
நூலியலாளர், லண்டன்
ஈழத்தின் முதலாவது கடல்தாண்டிய புலப்பெயர்வு நிகழ்ந்த 1870களில், மலாயாவுக்குச் சென்ற யாழ்ப்பாணத்துத் தமிழர் பலர் அங்கு இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வரலாறு படைத்தனர். இன்று மலேசிய-சிங்கை இலக்கிய வரலாற்றின் ஆரம்பப் பக்கங்களில் அவர்களின் பணிகள் விதந்துகூறப்படுகின்றன. அந்நாளில் இடைநிலை அதிகாரிகளாக ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்ட எம்மவர்கள் வண்ணார்பண்ணை, சுழிபுரம், வயாவிளான், புலோலி, வட்டுக்கோட்டை போன்ற ஊர்களைத் தம் பிறந்தகமாகக் கொண்டு மலேசிய மண்ணில் வாழ்ந்தனர். இவர்களில் பலர் முதலாம், இரண்டாம் உலகப்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஊர் திரும்பினர். சிலர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி “சிலோன் டமில்”களாக இன்றும் தனித்துவத்துடன் அடையாளப் படுத்தப்படுகின்றார்கள். மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த எம்மவர்களில் ஒருவராக இருந்தவர் 1887களில் வண்ணை அந்தாதி, வண்ணைநகர் ஊஞ்சல், சிங்கைநகர் அந்தாதி ஆகியவற்றைத் தந்த வண்ணார்பண்ணை சி.ந.சதாசிவ பண்டிதர் அவர்கள். இவரே மலாயா மண்ணில் முதல் தமிழ் நூலைத் தந்தவராவார். தங்கைநேசன் என்ற முதல் தமிழ்ச் சஞ்சிகை 1876இல் பினாங்கிலிருந்து வெளிவந்துள்ளது. புலம்பெயர்ந்த ஈழத்துத் தமிழ் படைப்பாளிகளின் கூட்டுமுயற்சியில் வெளிவந்த இவ்விதழே அந்தமண்ணின் முதலாவது தமிழ்ச்சஞ்சிகையாகக் கருதப்படுகின்றது.
சிங்கப்பூரில் 1893இல் வெளியான வயாவிளான் க.வேலுப்பிள்ளையின் சிங்கை முருகேசர் பதிகம், 1933இல் க.வே.கந்தையா எழுதிய கும்பழாவளை விநாயகர் தோத்திரப் பிரபந்தத் திரட்டு, 1941இல் கிள்ளானிலிருந்து சாஸ்திரி ஏ.ஆறுமுகனார் எழுதிய ஆன்மநாயகன் அருள்வேட்டல், 1951இல் ம.க.வே.பிள்ளைப் புலவர் எழுதிய சந்திரமௌலீசர் சதகம் போன்றவை தாயக நினைவுகளைத் தாங்கி அந்நிய மண்ணில் வாழத்தலைப்பட்ட ஈழத்தமிழர் மலேசிய மண்ணில் எழுதிய அரம்பகால நூல்கள். இப்பட்டியல் நீண்டது. விரிவஞ்சி இங்கு குறிப்பிடப்படவில்லை. மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டத்தில் இத்தகவல்கள் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மலாயாவின் வரலாற்றை முதன்முதலில் தமிழில் எழுதியவரும் நம்மவரே. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த சரவணமுத்துப்பிள்ளை முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் மலாயா மான்மியத்தை இரு பாகங்களில் எழுதி முறையே 1937, 1939 ஆகிய இரு ஆண்டுகளிலும் சிங்கப்பூரில் வெளியிட்டிருந்தார்.
மலாயாவின் தமிழ்;ப் படைப்பிலக்கியத்தின் முன்னோடிகளாகக் கருதப்படுபவர்களில் பலர் ஈழத்தமிழர்களே. புலோலியூர் க.சுப்பிரமணியம் (பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம், 1917-1918), அ.நாகலிங்கம் (சாம்பசிவம்-ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம், 1927), மு.சீ.செல்லத்துரை (கோரநாதன் அல்லது தென்மலாயகிரியில் வட இலங்கைத் துப்பாளி, 1934), செ.சிவஞானம் (நேசமலர் அல்லது கற்றோரின் கனா, 1936), க.டொமினிக் (அழகானந்த பஷ்பம், 1936), கதிரேசம்பிள்ளை (சயம்புநாதனும் சன்னாசியாரும் அல்லது அறிவாளி, 1935) போன்றோர் பற்றி இன்றும் மலேசிய இலக்கிய வரலாற்றாய்வாளர்கள் மறக்காமல் குறிப்பிட்டு வருகிறார்கள்.
யாழ்ப்பாணம் கந்தரோடையில் 1893இல் நன்னித்தம்பி சின்னத்தம்பியின் மகனாகப் பிறந்து சென்று மலாயாவில் இரெங்கான் என்ற ஊரில் புகையிரத நிலைய உதவித் தலைவராய் (யுளளளைவயவெ ளுவயவழைn ஆயளவநச) பணியாற்றியவர் ந.சி.கந்தையாபிள்ளை. நவாலியூர் மருதப்பு என்பவரின் மகளைத் திருமணஞ்செய்தவர். 1960இல் ஓய்வுபெற்றபின் இலங்கை திரும்பி ஏழாண்டுகளின்பின், 1967இல் இலங்கை மண்ணில் மறைந்தார். 60கக்கும் மேலான அரிய நூல்களை எழுதியவர். 74 ஆண்டுகள் வாழ்ந்து தமிழர் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் உலகளாவியரீதியில் தனது நூல்களின் வழியாகப் பரப்பியவர். அக்கால ஆங்கில அறிவியல் நூல்களைத் தழுவி, உலக அறிவியலை தமிழ் வாசகர்களுக்கு இனிய தமிழில் வழங்கியவர். இவர்பற்றிய வரலாற்றுச் செய்திகளை இலங்கையில் பேணிக்காக்கத் தவறிவிட்டோம்.
ந.சி.கந்தையாபிள்ளையின் 65 நூல்களை சென்னை அமிழ்தம் பதிப்பகத்தின் வாயிலாக கோ.இளவழகனார் அவர்கள் 2003இல் 24 தொகுதிகளில் வெளியிட்டிருந்தார். அதற்கான நூலறிமுகவுரை வழங்கிய பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.
“திரு.ந.சி.கந்தையாபிள்ளையின் பெயர் தமிழகத்திலேயே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவுசெய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப்பெற்றன. இந்நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளது. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில்கூட இவரது பெயர் முக்கியப்படுத்தப்பெறாது போயுள்ளது.”
இன்று ஈழத்தமிழர்களின் உலகளாவிய நூற்பட்டியலாகத் தனது ஒன்பதாவது தொகுதியில் நின்று 9000 ஈழத்துத் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தியிருக்கும் நூல்தேட்டம் பெருந்தொகுப்பிற்கு முன்னர் இலக்கிய வரலாற்றாய்வாளர்களால் ஈழத்தமிழரின் இலக்கியங்களுக்கான அநாதரட்சக நூற்பட்டியல்களாகக் கருதப்பெற்ற எப்.எக்.சி.நடராஜா, கனக.செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் போன்றோரின் பட்டியல்கள் எதுவும் இவர்கள் எவரையும் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளாக இனம்காணவில்லை என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டியதாகும்.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றை பல்வேறு காலகட்டத்திலும் எழுதிய எம்மவர்கள் அன்றைய புலம்பெயர் இலக்கியகர்த்தாக்களை ஈழத்துத் தமிழ் இலக்கியவாதிகளாகக் கருத மறுத்துவிட்டமையை இதுவரை வெளிவந்த பழைய வரலாற்று நூல்களை ஆழ்ந்து கற்கும்போது உணரமுடிகின்றது.
1977, 1983 இனக்கலவரங்களும், பின்னர் எழுந்த ஆயுதப்போராட்டச் சூழலும் ஈழத்தமிழர்களை மீண்டும் கடல்கடந்து புலம்பெயர வழியமைத்தன. அப்படிச்சென்று வாழத் தலைப்பட்ட பிரபல ஈழத்து எழுத்தாளர்களைப் பின்னைய ஈழத்து இலக்கிய வரலாற்றாய்வாளர்கள் ஈழத்துப் படைப்பாளிகளாகவே இனம்காணும் சூழ்நிலை உருவாகியது. இதற்கு இணையத்தளங்களின் அறிமுகம் மற்றும் மின் ஊடகங்கள் பெருமளவில் உதவின. அவ்வகையில் இன்று கனடாவில் வாழும் அ.முத்துலிங்கம், உ.சேரன், டென்மார்க்கில் வாழும் அ.பாலமனோகரன், ஜேர்மனியில் வாழும் இந்து மகேஷ், லண்டனில் வாழும் முல்லை அமுதன், பிரான்சில் வாழும் கி.பி.அரவிந்தன், எனப் பெரும்பட்டியலே ஈழத்துப் படைப்பாளர்களாக இனம்காட்டுகின்றது.
வரலாற்றாய்வாளர்களின் இந்த மனமாற்றத்தின் அடுத்ததொரு பரிமாணமாக புலம்பெயர்ந்தோர் இலக்கியம் (புலம்பெயர்ந்த ஈழத்தவர் படைக்கும் இலக்கியங்கள்), புகலிட இலக்கியம் அல்லது புலம்பெயர் இலக்கியம் (புலம்பெயர் வாழ்வு பற்றிய யூத இலக்கியங்களையொத்த பன்னாட்டு இலக்கியங்கள்) என்று புதிய தளங்களை ஆய்வுலகிற்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன் இவற்றை ஈழத்துப் படைப்பிலக்கிய உலகத்தின் நீட்சியாகவும் கருதுகின்றார்கள்.
இத்தகைய பின்னணியில் நின்று நாம் இன்றைய புலம்பெயர்ந்த ஈழத்து இலக்கியகர்த்தாக்களின், படைப்பாளிகளின் படைப்புலகத்தை தாயகத்தில் அறிமுகப்படுத்தும் ஆய்வாளர்கள் பற்றியதொரு தேடலை மேற்கொண்டால் முதலில் எமது கண்களுக்குள் சிக்கும் பெயர் “சு.குணேஸ்வரன்” என்பதாகவே அமைகின்றது. சு.குணேஸ்வரனின் படைப்புலகமும் ஆய்வுலகமும் புலம்பெயர்ந்த தமிழரையே சுற்றிவருவதை அவரது படைப்புகள் பற்றியதும், அவர் இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் பற்றியதமான தகவல்களைக் காணும்போது எம்மால் உணரமுடிகின்றது.
1971இல் பிறந்த சு.குணேஸ்வரன் துவாரகன் என்ற புனைபெயரிலும் இலக்கிய உலகில் அடையாளம் காணப்படுபவர். யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் இவர் அல்வாய், தினைப்புனத்தில் வசிப்பவர்.
தனது ஆரம்பக் கல்வியை கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியைத் தான் தற்போது கற்பிக்கும் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை யாழ்/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1999இல் தமிழ் சிறப்புப் பட்டதாரியாகத் தேறியவர். தனது (எம்.பில்) முது தத்துவமாணிப் பட்டத்தை 2006இல் யாழ்.பல்கலைக்கழகத்திலேயே பெற்றுக்கொண்டவர். கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வினை இங்கே மேற்கொண்டு வருகின்றார்.
1999இல் பல்கலைக்கழகத்தின் தமிழ் சிறப்புப்பட்டத்திற்கான ஆய்வாக “புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் கவிதைகள்-ஓர் ஆய்வு” என்ற தலைப்பைத் தேர்ந்து கலாநிதி நா.சுப்பிரமணியனின் நெறிப்படுத்தலில் ஆய்வை மேற்கொண்டவர். அதுவே பின்னாளில் சு.குணேஸ்வரனின் புலம்பெயர் தமிழ் இலக்கியங்களின் பாற்பட்ட ஈர்ப்பினை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று கருதுகின்றேன். பின்னாளில் தனது முது தத்துவமாணிப் பட்டத்திற்கான ஆய்வினை 2006இல் மேற்கொண்டபோது “இருபதாம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை, புனைகதைகள்-ஓர் ஆய்வு” என்ற தலைப்பைத் தன் ஆய்வுக்காகத் தேர்ந்தார். இவரது ஆய்வுநெறியாளராக பேராசிரியர் அ.சண்முகதாஸ் வழிநடத்தியிருந்தார்.
தற்போது தனது கலாநிதிப் பட்டத்திற்காக “ஈழத்தமிழரின் புலம்பெயர் தமிழ் நாவல்கள்- ஒரு நுண்ணாய்வு” என்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவரது பல்கலைக்கழக வாழ்வின் ஆய்வுகள் அனைத்துமே புலம்பெயர் தமிழரின் இலக்கியத்தை நோக்கிய குவிமையத்தைக் கொண்டிருப்பதை நாம் அவதானிக்கமுடிகின்றது. இதுவே இன்று புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துத் தமிழ்ப்படைப்பாளிகளுக்கு, தமது படைப்பிலக்கியத்தரத்தை உரசிப்பார்க்கக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகக் கருதலாம்.
சு.குணேஸ்வரன், தனது பல்கலைக்கழக மட்டத்தின் ஆய்வுகளுக்கு மாத்திரம் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தைத் தேர்ந்துகொண்டவர் அல்லர். அதற்கப்பால் அவர் மாநாடுகளில் சமர்ப்பித்துள்ள பல ஆய்வுநிலைப்பட்ட கட்டுரைகளை அவதானிக்கும்போதும் இத்துறையில் அவரது தேடலின் ஆழ அகலங்கள் தெளிவாகப் புலப்படுகின்றன.
2010இல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு வாசித்த ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு “புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியல்” என்பதாகும். ஜனவரி 2011இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொண்டு வாசிக்கப்பட்ட இவரது ஆய்வுக்கட்டுரை “இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்” என்பதாகும்.
கொழும்புத் தமிழ்ச்சங்க விழாவில் 2012இல் வாசிக்கப்பட்ட ஒரு ஆய்வுக்கட்டுரை “புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்வி” என்பதாகும். இவ்வாறாக 2013இல் மட்டும் எஸ்.ஏ.உதயனின் நாவல்கள் (சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தேசிய கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டது), ஷோபாசக்தியின் நாவல்கள் (அம்பாறை ஒலுவில் பல்கலைக்கழகம் நடாத்திய மூன்றாவது சர்வதேச ஆய்வு மாநாட்டில் வாசிக்கப்பட்டது), அ.முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்- ஓர் ஆய்வு (யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுப் பெருவிழாவில் வாசிக்கப்பட்டது), புகலிடப் புனைகதைகளின் வடிவம் (லண்டனில் உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் நடத்திய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது) ஆகிய நான்கு ஆய்வுக் கட்டுரைகளை தாயகத்திலும் புகலிடத்திலும் சமர்ப்பித்திருக்கிறார்.
புலம்பெயர் வாழ்வில் பல்வேறு வாழ்வியல் அழுத்தங்களுக்குள்ளும் இலக்கிய தாகத்தைத் தணியவிடாது மெருகேற்றித் தமது படைப்புகளின் வழியாகத் தந்துவரும் புலம்பெயர் படைப்பாளிகளின் படைப்புக்களை ஆய்வுக்குட்படுத்தி அவர்களது படைப்புகளை மீள்வாசிப்புக்குட்படுத்தி ஆரோக்கியமானதொரு உயர்தர இலக்கியத் தொடர்பாடலை- கருத்துப் பரிவர்த்தனையை சு.குணேஸ்வரன் தனித்துநின்று ஒரு இயக்கமாக மேற்கொண்டு வருவதை என்னால் அவதானிக்க முடிகின்றது. அவ்வகையில் பார்த்திபனின் எழுத்துக்கள், ஷோபாசக்தியின் நாவல்கள், கி.பி.அரவிந்தனின் பாரிஸ் கதைகள், அ.இரவியின் காலம் ஆகிவந்த கதைகள், அ.முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள், கருணாகரமூர்த்தியின் படைப்புகள், ஆ.சி.கந்தராஜாவின் படைப்புகள், கி.செ.துரையின் நாவல்கள், கலாமோகனின் கதைகள், சுமதி ரூபனின் சிறுகதைத் தொகுதி, ஆழியாளின் துவிதம், சுவிஸ் ஊடறு வெளியீடான பெயரிடாத நட்சத்திரங்கள்: பெண் போராளிகளின் கவிதைகள் என்று பல்வேறு புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளர்களின்; பிரசுர முயற்சிகளையும் சு.குணேஸ்வரனின் விரிவான தேடலுக்கு உதாரணமாக இங்கே குறிப்பிடலாம்.
சு.குணேஸ்வரன் இன்று வடமராட்சியில் இயங்கும் உயில் கலை இலக்கியச் சங்கத்தின் செயற்பாட்டாளர்களுள் ஒருவராக உள்ளார். தொண்டைமானாறு கெருடாவில் கலை இலக்கியச் சாகரம் என்ற அமைப்பினால் கொண்டுவரப்பட்ட சக்தி என்ற இதழின் ஆசிரியர்களுள் ஒருவராகவும் இருக்கிறார். இவரது இணைய வலைப்பதிவு www.vallaivelie.blogspot.com இவரது சகல ஆக்கங்களையும் தாங்கிச் சிறப்புற்று இயங்கிவருகின்றது.
மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் என்ற கவிதைத் தொகுப்பு (2008), அலைவும் உலைவும் என்ற பெயரில் புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த கட்டுரைத் தொகுப்பு (2009), புனைவும் புதிதும் என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு (2012) என்பன இவரது ஆக்கங்களைத் தாங்கிய நூல்களாகும்.
அம்மா-தேர்ந்த கவிதைகள் (2007), வெளிநாட்டுக் கதைகள் (2007), கிராமத்து வாசம் (2008), பாட்டிமார் கதைகள் (2010), கதை கதையாம் (2012) ஆகிய தொகுப்புக்களை இவர் பல்வேறு நினைவு மலர்களாகத் தொகுத்து யாழ்ப்பாணத்தின் கல்வெட்டுப் பாரம்பரியத்தை அடுத்ததொரு பரிணாம வளர்ச்சியைக்காண வைத்துள்ளார்.
இன்று உலகின் பல நாடுகளிலும் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புகளின் உரைகற்களாக விளங்கும் சு.குணேஸ்வரனின் ஆய்வுத் தேடலுக்குப் புகலிட வாழ்வில் எம்மைத் தொலைத்துக்கொண்டு இலக்கியத்தினூடாக வாழும் நமது படைப்பாளிகளின் பங்களிப்பும் முக்கியமானதாகும். அவரது தேடைலை இலகுவாக்கத் தத்தம் படைப்பகளை சு.குணேஸ்வரனின் பார்வைக்கும் அனுப்பிவைத்து புலம்பெயர் வாழ்வியலை ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலிருந்து பிரித்தொதுக்கமுடியாதவொரு தளமாக எதிர்கால தமிழியல் ஆய்வாளர்கள் கொள்ள வழிவகை செய்தல் வேண்டும். அத்துடன் மேலும் பல புதிய புகலிட இலக்கியத் திறனாய்வாளர்களை ஈழமண்ணிலிருந்து தம் பக்கம் நோக்கி வரித்தெடுக்க வேண்டிய கடமையும் எம்மவர்களுக்கு உண்டு. இதற்காக புலம்பெயர் நாடுகளிலிருந்து நாம் எமது இரு கைகளையும் தாயகத்தைநோக்கி நீட்டவேண்டியது அவசியமாகும். புகலிடத்துத் தரமான வெளியீடுகள் பல தாயகத்தைச் சென்றடையாமல் தமிழகத்துடனேயே நின்றுவிடுகின்றன. இந்நிலை முன்னர் ந.சி.கந்தையாவுக்கு ஏற்பட்டது. 21ம் நூற்றாண்டிலும் இந்நிலை தொடர்வது இனிமேலாவது தவிர்க்கப்படவேண்டும்.
திறனாய்வுகளின் மூலம் எமது புகலிடப் படைப்பிலக்கியத்தை செழுமையுறச் செய்ய வேண்டும். தரமற்ற நாவல்கள், அர்த்தமற்ற சிறுகதைகள் போன்று, இன்று கட்டுரையா கவிதையா என்று குழப்பங்களைத் தரும் கவிதைத் தொகுதிகளின் வருகையும், புகலிடத்தில் பெருகியுள்ளன. தரமான நூல்களை விதந்து போற்றுவதுடன் மட்டும் நின்றுவிடாது, தரமற்ற வளர்முகப் படைப்பாளிகளின் நூல்களையும் பெற்று, சு.குணேஸ்வரனையொத்த தீவிரமான, நேரிய திறனாய்வாளர்கள் விமர்சித்து, அவர்கள் திருந்த வழிகாட்டி, எதிர்காலத்தில் தரமான கவிதைகளைத்தரும் நோக்கில் ஆழமான தேடலையும் வாசிப்பையும் பெற்றுக்கொள்ள வழிசமைக்கவேண்டும்.
20.10.2013
noolthettam.ns@gmail.com
நன்றி : பதிவுகள்.கொம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக