டிசம்பர் 16, 2018

குந்தவையின் ‘பாதுகை’பிடித்த சிறுகதை -
- சு. குணேஸ்வரன்

   1963 இல் ஆனந்தவிகடனில் ‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்ற முத்திரைக் கதையுடன் அறிமுகமானவர் எழுத்தாளர் குந்தவை. இவரது இயற்பெயர் சடாட்சரதேவி. யுத்தத்தின் கோரமுகங்களைத் தரிசித்து தொண்டைமானாற்றை விட்டு அகலாது தனது தளர்ந்த வயதிலும் தனியாக வாழ்ந்து வருபவர். ஈழத்தில் பெயர் குறிப்பிடக்கூடிய மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இன்றுவரையும் எழுதி வருபவர். இவரின் “யோகம் இருக்கிறது”, “ஆறாத காயங்கள்” ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.

  குந்தவையின் சிறுகதைகள் யதார்த்த வாழ்வின் பதிவுகள். ஈழத்து மாந்தர்களின் வாழ்வின் இருண்ட பக்கங்களையும் தன்னைப் பாதித்த கதைகளையும் மண்ணின் பண்பாட்டோடு அழகாக வெளிப்படுத்துபவை. இவரின் கதைகளில் வரும் காட்சிச் சித்திரிப்புக்கள் வாசகரை கதைகளோடு கட்டிப்போடக்கூடியவை.

   இவர் எழுதிய “பாதுகை” என்ற சிறுகதை பற்றி இச்சிறுகட்டுரையில் குறிப்பிடலாம். இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்ட பல பிள்ளைகளின் கதைகளில் ஒரு கதையைச் சொல்வது. அவளின் ஒரேயொரு மகன் அவளின் கண்முன்னேயே காணாமல் ஆக்கப்பட்டவன். மகன் வருவான் என எதிர்பார்த்து, தாய் எதிர்கொள்ளும் வேதனைகளும் உள்ளக்குமுறல்களும் உணர்வுபூர்வமாக இச்சிறுகதையில் பதிவாகியுள்ளது.

“வாசலில் நின்று அம்மா அம்மா என்று கூப்பிட்டான் தயாளன். உள்ளே ஒருவருமிருப்பதாகத் தெரியவில்லை. முன் எப்பொழுதாவது இந்த வீட்டின் முன்நின்று இப்பிடி அன்னியன்போல் கூப்பிட்டிருப்பானா என யோசித்தான். “ரமணா” என கூப்பிட்டுக் கொண்டு அட்டகாசமாக உள்ளே நுழைந்துதான் பழக்கம். மீண்டும் கூப்பிட்டான். வெளியிலிருந்து வீட்டைச் சுற்றிக்கொண்டு யாரோ வருவது தெரிந்தது. ரமணனின் அம்மாதான். பாதியாய் இளைத்திருந்தாள். முன்கற்றைத் தலைமயிர் வெளுத்து காற்றில் அலைந்தது. கன்னம் ஒட்டிப்போய் இருந்தது. நடுவே சுருக்கங்கள்.”

   இவ்வாறு ரமணின் தாய் இச்சிறுகதையில் அறிமுகப்படுத்தப்படுகிறார். நீண்ட காலத்திற்குப் பின்னர் தனது நண்பன் ரமணனின் நிலை தெரிந்திருந்தும், அவனின் தாயாரிடம் ஒரு முறை வரும் சக நண்பனாகிய தயாளனின் பார்வையூடாகவே இச்சிறுகதை நகர்த்தப்படுகிறது. அப்போது ரமணனோடு படித்த, பழகிய உறவாடிய காலங்கள் எல்லாவற்றையும் அவன் மீட்டுப் பார்க்கிறான். அந்தத் தாயாரோடு பல விடயங்களைப் பரிமாறிக் கொள்கிறான்.

“ஆம்பிளை செக் பொயிண்டிலிருந்து என்ரை பிள்ளை வெளியில வந்தவன் தம்பி. நான் கண்டனான் அதுக்குள்ளை என்னை பொம்பிளை செக் பொயின்ரிலை கூப்பிட்டாங்கள். நான் உள்ளை போயிட்டன். திரும்பி வந்து பார்த்தா என்ரை பிள்ளையைக் காணேல்ல. வெளியில நிண்ட தாங்கள் பிடிக்கேல்லை எண்டான். பஸ் வந்து தங்களை வவுனியாவிற்கு ஏற்றிச் செல்லுமெனக் காத்திருந்த சனத்துக்குள்ள நான் ‘விசரி’ மாதிரிச் திரிஞ்சன். என்ரை பிள்ளையைக் கண்டீங்களோ? என்று கேட்டு ஒரு நாளோ இரண்டு நாளோ? பசி தாகம் ஒண்டுமே தெரியேல்ல”


   மகனைப் பிரிந்த வேதனைகளும் வார்த்தைகளும் தயாளனையும் வாட்டுகிறது. நாளை புறப்படும்போது ரமணனின் நினைவாக ஏதாவது ஒரு பொருளை எடுத்துச்செல்லலாம் என எண்ணுகிறான். தற்செயலாக அவனின் செருப்பு கண்களுக்குப் புலப்படுகிறது. அதனை எடுத்துச்செல்ல மனம் விரும்புகிறது.

“முன் கதவைச் சாத்தப்போன வேளை கதவிற்குப் பின்னால் அந்தச் செருப்புகளை அவன் கண்டான். அவை ரமணனின் செருப்புகள். அவற்றை கிளிநொச்சியில் ரமணன் வாங்கியபொழுது அவனும் கூட இருந்தான். அவை ரமணனுக்குப் பிடித்திருந்தன. நல்ல லெதரில் சிறிய வேலைப்பாடுகளோடு கூடிய செருப்புகள். அவற்றை அதிகம் ரமணன் அணிவதில்லை. வெளியூர்களுக்குப் பாடசாலைக்குப் போகும் வேளையில் அணிவான். மற்றும்படி கறுத்த ரப்பர் பாட்டா செருப்புத்தான் போட்டிருப்பான். தயாளன் அந்தச் செருப்புகளைப் பார்த்தவாறு நிற்பதைக் கண்ட ரமணன் தாய் அருகில் வந்தான். “இது ரமணனின் செருப்பு தம்பி. இதைத்தான் ரமணன் எண்டு வைச்சுக் கொண்டிருக்கிறம். ஒரே ஆறுதல் இதுதான். இதை பக்கத்தில வைச்சுப் போட்டுப் படுத்தாத்தான் வயித்துக்கொதி அடங்கி நித்திரை வரும்” என்றாள்.அரிக்கேன் லாம்புத் திரியைக் குறைத்து வைத்துவிட்டு பாயை அவள் சுவரோரம் இழுத்துப் போடுவது தெரிந்தது. பின் போய் அந்தச் செருப்புகளை கையிலெடுத்துக் கொண்டு திரும்பி வந்தாள். இடுப்புச் சேலையைத் தளர்த்தி கொய்யகச் சுருக்குகளை வெளியே எடுத்து அவற்றில் செருப்புகளைப் பொதித்துச் சுருட்டி உள் பாவாடைக்குள் செருகி வயிற்றுக்கு நேரே இறக்கினாள் அவற்றை அணைத்துப் பிடித்தபடி படுத்துக் கொண்டாள். தயாளன் கண்களை நன்கு மூடிக் கொண்டான். மூடிய இமையோரத்தில் கண்ணீர் தேங்கியது.”


   இவ்வாறாக, குந்தவையின் ‘பாதுகை’ சிறுகதை மகனை இழந்துபோன ஒரு தாயின் மனவேதனைகளையும் ஏக்கங்களையும் உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்கிறது. இதனாற்தான் வெங்கட் சாமிநாதன் ‘தொடரும் உரையாடல்’ என்ற கட்டுரையில் “குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேஷமானவை. அவரது எழுத்தும் அலங்காரங்களோ உரத்த குரலோ ஆவேச உணர்வோ அற்றது. ஆனால் மிகுந்த தேர்ச்சி பெற்ற எழுத்து.” எனக் குறிப்பிடுகிறார்.

   இச்சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு நண்பர் மதிசுதா ‘பாதுகை’ என்ற குறும்படத்தை எடுத்துள்ளார். அக்குறும்படத்தில் குறித்த உணர்பூர்வமான இக்காட்சி அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இச்சிறுகதை சிங்களத்திலும் மொழிபெயர்ப்புக்குத் தேர்வாகியுள்ளது என்பதும் மேலதிக தகவல்கள் ஆகும்.

Thanks : Puthuvithi 15.12.2018
---
நவம்பர் 11, 2018

அ. முத்துலிங்கத்தின் ‘அம்மா’ பாத்திரவார்ப்பு


- சு.குணேஸ்வரன்

  ஒரு நாவல் பாத்திரப்படைப்பாலேயே சிறப்புப்பெறுகிறது. அது சிறுகதையாயினும் நாவலாயினும் அப்படைப்புக்கள் பற்றி பேசும்பொழுது அவற்றில் வந்த பாத்திரங்களே எப்போதும் நினைவில் நிற்பன. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களில் வரும் ‘கங்கா’ போல பாத்திரங்கள் முழுமையும் சிறப்பும் பெற்றிருக்கவேண்டும் என்று கருதப்படுகின்றது.

  நாவலில் பாத்திரங்கள் முதன்மை இடத்தில் இருத்தல் வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்தாகும். மிகையுணர்ச்சி மற்றும் வீரம் சார்ந்த நாவல்களில் நிகழ்ச்சிகளுக்குச் சிறப்பிடம் தரப்பெறும். ஆனால் அண்மைக்காலத்தில் இம்மிகையுணர்ச்சி பெரிதும் போற்றப்படுவதில்லை. யதார்த்தமான சித்திரிப்பே வரவேற்கப்படுகிறது. இதனை ஒரு நாவலில் பாத்திரங்கள் மூலமாகவே காட்டமுடியும்.
அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” என்னும் நாவலில் வரும் அம்மா, என்ற பாத்திரம் மனதில் நிலைத்து நிற்கும் வகையில் வார்க்கப்பட்டுள்ளது.

  முத்துலிங்கம் தனக்கு நினைவு தெரிந்த மூன்று வயதில் இருந்து இந்தக் கதையைச் சொல்கிறார். தன்னைப் பற்றியும், தனது சகோதரர்கள் பற்றியும், பள்ளிப்பருவ நண்பர்கள் பற்றியும், இளம்பருவக் குறும்புகள் பற்றியும் எழுதிச் செல்கிறார். தன்னைச் சூழ இருந்த குடும்ப உறவுகளின் கதையை அடிமனத்தின் ஆழத்திலிருந்து கதை கதையாகச் சொல்லியபடியே செல்கிறார். குறிப்பாக தாய், தந்தை, அக்கா ஆகிய பாத்திரங்களின் வார்ப்பும் அவர்களைப் பற்றிய படிமமும் மனத்தை விட்டு அகலாதவையாக உள்ளன.
முத்துலிங்கம் தனது தாயாரை 13 வயதில் இழந்துவிடுகிறார். அப்பருவம் வரை தன் நினைவில் நிறைந்திருக்கின்ற அம்மாவை அழகாகச் சித்திரித்துள்ளார். ஏற்கெனவே முத்துலிங்கத்தின் பல சிறுகதைகளில் அம்மா பாத்திரம் அழகாக வார்க்கப்பட்டுள்ளது. அதனால் தாய் பற்றிய உணர்வு புனைவு முழுவதும் ஆங்காங்கே இழையோடுகிறது. இப்புனைவில் ‘முதல் நினைவு’, ‘பேச்சுப்போட்டி’, ஆகிய தலைப்புக்களில் வருகின்ற அம்மா பற்றிய பதிவும் மறக்கமுடியாதது. ஒருமுறை நல்லூர் சப்பறத் திருவிழாவுக்கு அம்மா ஐயா சகோதரர்களுடன் சென்றபோது சனநெரிசலில் அகப்பட்டு தாயையும் சகோதரியையும் பிரிந்துவிடுகிறார்கள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பின்வருமாறு எழுதுவார்.
   “ஒரு நீண்ட வாங்கில் நாங்கள் எல்லோரும் பொலீஸ் ஸ்டேசன் வாசலில் உட்கார்ந்திருந்தோம். அங்கு இருந்த பொலிஸ்காரர்களும், வந்துபோன சனங்களும் நாங்கள்தான் தொலைந்து போனவர்கள், யாருடைய வருகைக்கோ காத்திருக்கிறோம் என்பதுபோலப் புதினமாகப் பார்த்தார்கள். திடீரென்று அண்ணன் அழத்தொடங்கியபோது எனக்குப் பயம் பிடித்தது. அரை மணிநேரம் கழித்து அம்மா அரக்கப்பரக்க ஓடிவந்தார். எந்தப்பூகம்பம் வந்தாலும் அழாத தங்கச்சி அழுகை முடிந்து விம்மிக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் கண்ணீர் காய்ந்து காணப்பட்டது. அம்மா கவனமாக மடிப்புகள் வைத்து உடுத்திய சேலை தாறுமாறாகக் குழம்பிக் கிடந்தது. தலைமயிர் குலைந்து கண்ணீர் ஒழுகியது. வாய் குழறியது. அப்படியே ஓடிவந்து எங்களைக் கட்டிக்கொண்டார். ‘என்ரை பிள்ளைகள், என்ரை பிள்ளைகள்’ என்று வாய் ஓயாமல் பிதற்றிக் கொண்டு எங்கள் ஒவ்வொருவருடைய அங்களையும் தடவிப் பார்த்து அவை அந்தந்த இடங்களில் இருக்கின்றனவா என்று உறுதி செய்து கொண்டார். அம்மா தைரியமானவர் இப்படியான அற்ப விசயங்களுக்கெல்லாம் கலங்காதவர். ஆனால் அன்று யாரோ மூன்று பிள்ளைகள் செத்துப் போனார்கள் என்று அம்மாவிடம் சொல்லிவி;ட்டார்கள் அம்மாவின் மனதில் அது நாங்கள்தான் என்பது தீர்மானமாகிவிட்டது.”
   இங்கு அம்மாவின் படிமம் அழகாக வார்க்கப்பட்டிருக்கிறது. கோயில்திருவிழா சனநெரிசலில் காணாமற்போன தங்களுக்காக அம்மாவின் கலக்கத்தையும் துன்பத்தையும் எடுத்துக்காட்டுவார்.
   இதேபோல் ஒரு குக்கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் இருந்து பேச்சுப்போட்டிக்குச் சென்று பரிசில் கிடைக்காமல் திரும்பி வந்த நினைவுகளையும் எடுத்துக்காட்டுவார். அந்த வர்ணணை மனத்தில் ஒர் இருளாக மூடிக்கொள்வதையும் படிப்போர் உணர்வர்.
   “வீடு இருட்டில் மூழ்கிக் கிடந்தது. எல்லோரும் தூங்கப்போய்விட்டார்கள் என்றே நினைத்தேன். ஒரேயொரு கைவிளக்கு எரிய அம்மா எனக்காகத் தூங்காமல் காத்திருந்தார். நான் ஒரு பெரிய ஆள், ஏதோ முக்கியமான காரியமாக வெளியே போய்விட்டு வருகிறேன் என்பதுபோல அம்மா எனக்காகக் கண்விழித்திருந்ததை இன்றுவரைக்கும் என்னால் மறக்கமுடியாது. என்னைக் கண்டதும் அம்மா கட்டி அணைத்து, தலையைத் தடவி ஈரம் இல்லையென்று உறுதி செய்தபிறகு ‘பிள்ளை உனக்கு நல்ல பசி. வா, நான் சாப்பாடு போடுறேன்’ என்றார். அன்றைய பேச்சுப்போட்டியில் என்ன நடந்தது என்றோ, நான் எப்படிப் பேசினேன் என்றோ, யாருக்குப் பரிசு கிடைத்தது என்றோ ஒரு வார்த்தை அவர் என்னிடம் கேட்கவில்லை. கையிலே வெற்றிக் கிண்ணம் இல்லாததைப் பார்த்துவிட்டு என்னைக் கேள்வி கேட்டு வேதனைப்படுத்தக்கூடாது என்று நினைத்திருக்கலாம்.
   இங்குகூட அம்மாவின் உண்மை அன்பு எடுத்துக் காட்டப்படுகிறது. ஈழத்தில் எஸ்.பொவுக்குப் பின்னர் மிகச் சிறந்த கதைசொல்லியாக முத்துலிங்கத்தை அடையாளப்படுத்த இதுபோன்ற எழுத்துநடையை அவர் பல கதைகளில் முத்திரையாகப் பதித்துள்ளார்.

நன்றி :புதுவிதி, 10 நவம்பர் 2018
---

ஆகஸ்ட் 07, 2018

ஆடிப்பிறப்பு விழாபருத்தித்துறை பிரதேச செயலகமும் வடமாகாண கல்வி பண்பாட்டலுல்கள் விளையாட்டுத்துறை அமைச்சும் ஏற்பாடு செய்த ஆடிப்பிறப்பு விழா தொண்டைமானாற்றில் நடைபெற்றது.( படங்கள்: கலை ஒளி விக்கி)

தலைமையுரை - பிரதேச செயலர்.
சிறப்புரை : கலாநிதி சு. குணேஸ்வரன் 


 போர்த்தேங்காய் அடித்தல் கெருடாவில் விவேகானந்தா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுவிழா
கெருடாவில் விவேகானந்தா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுவிழா 24.06.2018 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.