ஜனவரி 27, 2023

அஞ்சலி: வேலுப்பிள்ளை பரமானந்தம்எங்கள் தலைமுறையின் வழிகாட்டி

னது ஆசானும் சமூக முன்னோடியும் பருத்தித்துறை ப.நோ.கூ.ச முன்னாள் வர்த்தக முகாமையாளருமாகப் பணியாற்றிய அன்புக்குரிய வே. பரமானந்தம் (விசயண்ணா) அவர்களின் பிரிவு இன்று (15.12.2022) நிகழ்ந்தது.

கெருடாவிலில் படித்த தலைமுறைகளை உருவாக்குவதில் முன்னோடியாகச் செயற்பட்டவர்களில் ஒருவர் வே.பரமானந்தம் அவர்கள். சமூகத்தின் பலதரப்பட்டவர்களும் பல்வேறு துறைகளில் மிளிர்ந்த காலம். எமது கிராமத்தின் தாய்ச்சங்கமாக இருந்த விவேகானந்தா சனசமூக நிலையத்தை மையப்படுத்திய சமூகச் செயற்பாடுகள் பலதரப்பட்டவை. கல்வி நடவடிக்கைகள், விளையாட்டுச் செயற்பாடுகள், கலைச்செயற்பாடுகள். குறிப்பாக, சமூக நாடகங்களுக்கு ஊடாக திராவிடக் கருத்துக்களும் ஒழுக்க விழுமியங்களும் தனிமனித முன்னேற்றம் குறித்த கருத்துக்களும் மக்களுக்குப் பரப்பப்பட்ட காலம். ஒருபுறம் மக்களின் உள்ளூர் உற்பத்தியை, சேமிப்பை ஊக்கப்படுத்தும்; சர்வோதயம், சிக்கன கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கிய காலம். கோயில் திருவிழாக் காலங்களில் கூட வானுயர்ந்த சிகரங்களை நான் சிறுவனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். இப்போது அவை கனவுபோல் உள்ளன. இந்தக் காலங்களில் எல்லாம் பரமானந்தம் அவர்களின் கைகளும் இணைந்திருந்தன.
கிராமத்திற்கு மின்சார வசதி இல்லாத காலம். ரியூசன் முடிய இரவாகிவிடும். 'அரிக்கன் லாம்பு' வெளிச்சத்தில் எங்களை ஒவ்வொருவராக வீடுகளில் சேர்ப்பித்து தனது வீடு சென்ற காலங்கள் நினைவை மீட்டுகின்றன.

நாங்கள் வளர்ந்து உயர்தர வகுப்புகளில் கற்றபோது எங்களையும் தனது அடுத்தகட்ட நகர்வுக்குத் தயார்ப்படுத்தினார். நான் சபைமுன் பேசப்பழகியது மற்றுமொரு களமாகிய அண்ணா சனசமூக நிலையத்தில். இலக்கிய ஈடுபாட்டை வளர்த்தது வேறொரு களத்தில். பட்டிமன்றங்கள் என்றால் அவரின் தலைமையில் கூடுவோம். ரியூசன்களை நடத்தினோம். நாடகங்கள் நடித்தோம். கலை இலக்கிய சாகரம் என்று ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்கி அதற்கூடாக 'சக்தி' என்ற சஞ்சிகையை வெளியிட்டோம். எல்லா இடத்திலும் அவர் இருந்தார். வழிப்படுத்தினார். சமூக நிகழ்வுகளில் அவரின் கணீரென்ற கம்பீரமான குரல் எல்லோரையும் வசீகரிக்கும்.

அவரிடம் கற்ற எனது வயது தோழரும் தோழியரும் இன்று பல தொழில்களை ஆற்றுகிறார்கள். ஆசிரியர்களாக நிர்வாக உத்தியோகத்தர்களாக இருக்கிறார்கள். எங்கள் அடுத்த தலைமுறைகள் சிறப்பாகக் கற்கிறார்கள். அவரின் ஐந்து பிள்ளைகளும் நன்றாகக் கற்றார்கள்.அரச பணிகளில் இருக்கிறார்கள்.

இன்று காலம் மாறிவிட்டது. செய்த நன்மைக்கு நன்றிகூடச் சொல்ல மாட்டார்கள். கைத்தொலைபேசிக்குள் ஓர் உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு மனித மனங்களைப் புறக்கணிக்கிறார்கள். புரளி பேசுகிறார்கள். சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் தொலைத்துவிட்டு எது நல்லது எது கெட்டது என்பதுகூடத் தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள். இவைதான் இன்றைய அதிகமான கிராமங்களின் நிலையாக இருக்கிறது.இந்த இடத்தில் தான் எனக்கு பரமானந்தம் அவர்களின் அர்ப்பணிப்பான சேவையும் அளப்பரிய சமூகப்பணியும் பெரிதாகத் தெரிகிறது.

ஒரு கல்வி கற்ற சமூகத்தை உருவாக்க பரமானந்தம் போன்றவர்கள் கைகாட்டி விட்ட பாதை இன்னமும் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. அந்தப் பாதையில் அவர் இன்னமும் எங்களை வழிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆழ்ந்த அஞ்சலிகள் ஆசானே!

- கலாநிதி சு. குணேஸ்வரன்