ஜூலை 11, 2022

அநியாய உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்புக் கூறுவது?




அண்மைக்காலத்தில் விபத்து, தற்கொலை, வன்கொடுமை முதலானவற்றினூடாக அநியாயச் சாவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவை எதேச்சையாக நடக்கின்றனவா அல்லது குறித்த நபர்களின் கவனமின்மையால் நடக்கின்றனவா அல்லது குடும்பங்களின் பொறுப்பின்மை மற்றும் சமூக நிறுவனங்களின் கண்டுகொள்ளாத தன்மைகளால் நிகழ்கின்றனவா?
முப்பது வருடத்திற்கு மேலான யுத்தத்தினால் நாங்கள் இழந்தவை அதிகம். அந்த இழப்புக்களின் கண்ணீர்ப் படலங்கள் இன்னமும் நீங்கவில்லை. குண்டுவெடிப்புக் காலங்களில்கூட வீதியோரங்களில் திறந்தவெளிப் பதுங்கு குழிகளை அமைத்து மக்கள் தமது உயிர்களைப் பாதுகாத்து வந்தனர். பாடசாலை மாணவர்கள் அதிகமும் தம்மையும் அயலவரையும் பாதுகாத்துக்கொள்ளும் முதலுதவிப் பயிற்சியையும் அறிந்திருந்தனர்.
தற்காலத்தில் அநியாய உயிரிழப்புக்களை எங்களால் தடுக்கமுடியாது இருப்பதற்குக் காரணம் யாதாக இருக்கமுடியும்?
விபத்தினால் உயிரிழப்போர் தொகையே அதிகமாக இருக்கின்றது. இதற்கு போக்குவரத்து நெருக்கடி மற்றும் வீதிகளைக் குறை சொன்னாலும் குறித்த நபர்களின் அசண்டையீனமும் மற்றவர்களை ஒரு பொருட்டாக மதிக்காத திமிர்த்தனமும் காரணமாக இருப்பதாக எண்ணுகிறேன்.
நேரிலும் குறுக்கு வழியிலும் வருகின்ற அதிக பணப்புழக்கம் சாதாரணமானவர்களை ஒரு பூச்சிபோல ஏளனம் செய்வது மட்டுமல்லாமல் பெற்றோரின் கண்டிப்பு கைவிட்டுப் போனமையும் காரணமாக இருக்கலாம். சிறிய விடயங்களைக்கூடப் பேசித் தீர்க்கமுடியாத சந்ததியொன்று நியாயம் கதைப்பவரிடம் கைநீட்டுவது முதல் தாமே சட்டத்தைக் கையிலெடுத்து தீர்ப்பு வழங்குவதுவரை காண்கின்றோம்.
பொதுப்பரீட்சை முடியும் இறுதிநாளில் மாணவர் பொதுச் சொத்துக்களைச் சேதமாக்குவர் என்றறிந்து அரசாங்கமே சுற்றறிக்கை விடும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
கிராமங்களில் இருக்கும் பொது நிறுவனங்கள் பெயருக்கு இருக்காமல் மக்களுக்கு அறிவுரை வழங்கவும் வழிகாட்டலைச் செய்யவும் முன்வரவேண்டும். ஏதாவது உதவித் திட்டங்களுக்காக மட்டும் ஒன்றுகூடுவதற்கு மட்டுமா பொதுநிறுவனங்கள்? ஒருவரை இழப்பதன் வலியும் வேதனையும் அந்தக் குடும்பத்திற்குத்தான் தெரியும்.
எனவே, இந்த நிலைமைகளை மாற்ற நாங்கள் என்ன செய்யலாம்.
சமூகச் செயற்பாட்டாளர்கள் கிராமங்கள் தோறும் செயற்படவேண்டும். பெற்றோர் கூடிய கரிசனை எடுத்து பிள்ளைகளை வழிப்படுத்தவேண்டும். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற தலைக்கனமும் குடும்பப் பெருமைகளை பறைசாற்ற கற்றோர் மற்றோரின் கருத்துக்களைச் செவிமடுக்காத திமிர்தனமும் சரியான ஆலோசனை வழிகாட்டல் இல்லாத நிலைமைகளும் இவ்வாறானவைகளுக்கு வழிவகுக்கின்றன.
இவற்றை தவிர்த்து எமது சந்ததிகளை அறிவுள்ள ஆளுமையுள்ள செயற்றிறனுள்ளவர்களாக மாற்றுவதற்கு படைப்பாளர்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் முன்வருவார்களா?

- சு.குணேஸ்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக