ஜனவரி 23, 2012

கதை கதையாம்...மின்நூல் வடிவம்

2வது இணைப்பு 
நிகழ்வின்போது த. அஜந்தகுமார் நூல் பற்றிய உரையினை நிகழ்த்தினார்.அந்த உரையின் ஒரு பகுதியைத் தருகிறேன்.



1 வது இணைப்பு
24.01.2012 இல் வெளியிடப்படும் கதை கதையாம்...(தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) நூலின் மின்வடிவப் பிரதி இணைய வாசக நண்பர்ளுக்காகத் தரப்படுகிறது.

நூல் :- கதை கதையாம்...(தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்)
தொகுப்பு :- சு.குணேஸ்வரன்
வெளியீடு :- 24.01.2012
வெளியீட்டாளர் :- இளையகுட்டி அருமைக்கிளி குடும்பத்தினர்
தொடர்பு முகவரி :- இ. நிர்மலா,கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறு.

ஜனவரி 21, 2012

கதை கதையாம்…




(தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்)
- தொகுப்பு சு.குணேஸ்வரன்

கதை கதையாம்… (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) எனது பெரியதாயார் இளையகுட்டி அருமைக்கிளி அவர்களின் 31 வது நினைவுநாள் வெளியீடாக நான் தொகுத்துத்தரும் நூல் இது. இந்நூலில் செம்பியன் செல்வன், சாந்தன், காசி ஆனந்தன், எஸ்.பொ, எஸ்.ராமகிருஸ்ணன் ஆகியோரின் 28 குறுங்கதைகள் உள்ளன. இணைய வாசக நண்பர்களுக்கு அன்றையதினம் மின்நூலாகத்தரும் திட்டமும் உள்ளது. - சு.குணேஸ்வரன்

தொகுப்பிலிருந்து இரண்டு கதைகள்...
1. தீர்வு

“மதில் கரையோட நிக்கிற பப்பாசி மரத்தில, ஒரு பழமும் மிஞ்சுதில்லை…”

“ஏன்?”

“றோட்டுக்கு அந்தப் பக்கமிருக்கிற பட்டினிப் பட்டாளங்களெல்லாம், ஆக்களில்லாத நேரம் பார்த்து மதிலிலை ஏறி> எல்லாத்தையும் பிடுங்கிக் கொண்டு போடுதுகள்.”

“அந்த மரத்தை வெட்டி விடுங்கோ, தொல்லை இல்லை!”

- சாந்தன்-



2.இடம்

கழுதையும் பட்டாம்பூச்சியும் உலாப்போயின.

மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

‘இந்த இடத்தில் நான் இசைக்கச்சேரி வைப்பேன். இங்கே எனக்கு வரவேற்பிருக்கும்…’ என்றது கழுதை.

அது பாடத் தொடங்கியது.

என்ன கொடுமை… கழுதைக் கச்சேரி- கல்வீச்சு கலாட்டா என்று ஆகியது.

அடிபட்ட கழுதையும் பட்டாம்பூச்சியும் ஊரின் எல்லையில் சாய்ந்து கிடந்த ஒரு குச்சி வேலியின் அருகில் வந்து சேர்ந்தன.

கழுதைக்கு ஒரே கொண்டாட்டம்.

ஓணான்கள் வரிசையாக அங்கே வேலியில் உட்கார்ந்து தலையை ஆட்டிக் கொண்டிருந்தன. கழுதை மகிழ்ச்சியோடு பாடத் தொடங்கியது.

என்ன ஆச்சரியம்!

தலையை ஆட்டி எல்லோரும் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

வியப்போடு அசைவற்று நின்ற பட்டாம்பூச்சியைப் பார்த்து ஒரு வண்டு ‘ஒன்றும் வியப்படையாதே… இங்கே அப்படித்தான்’ என்று கூறியது.

சுருக்கமாக அது சொன்னது-

‘ஓணான்களின் ஊரில்
கழுதைகளும் வித்துவான்களே!’

- காசி ஆனந்தன்-


ஜனவரி 14, 2012

மரணத்தில் துளிர்க்கும் கனவு பற்றி...



தீபச்செல்வன் 
நன்றி - தமிழ்வின் 
எண்பதுகளில் ஈழத்து கவிஞர்கள் பதினொருபேர் எழுதிய மரணத்துள் வாழ்வோம் என்ற கவிதைத் தொகுப்பு வெளியானது. அதன் பிறகு ஈழத்து கவிஞர்களின் பல்வேறு தொகுப்புக்கள் வெளிவந்து விட்டன.
எண்பதுகளில் மரணத்தில் வாழ்ந்து கொண்டு எழுதப்பட்ட இந்தக் கவிதைகளுக்கும் இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளுக்கும் இடையில் சுமார் மூன்று தசாப்த்தங்கள் கழிந்திருக்கின்றன. முப்பது ஆண்டுகள் ஆகிப்போயிருக்கின்றன.
இப்பெரும் கால கட்டத்தில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்துவிட்டன. ஈழப் போராட்டத்தில் 2009 பெரும் ஊழி நடந்ததொரு காலம். தொடர்ந்தும் ஈழ நிலத்தில் வாழ்ந்து கொண்டு போரையும் அதன் துயரத்தையும் எதிர்கொள்ளும் கவிஞர்கள் இந்தக் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள்.
இக்கவிதைகளுக்கு இடையில் வேவ்வேறான வாழ்வுச் சூழலும் தவிப்பும் அனுபவங்களும் இருக்கின்றன. எல்லாக் கவிஞர்களிடத்திலும் வாழ்க்கை பற்றிய ஏக்கமும் காதலும் பெரும் எதிர்பார்ப்புக்களாய் இருக்கின்றன. போரையும் காதலையும் வெவ்வேறு கோணங்களில் இந்தக் கவிஞர்கள் பார்க்கிறார்கள்.
இத்தொகுப்பில் ஈழத்தின் கிழச்கைச் சேர்ந்த அனார், அலறி மற்றும் வடமேல் மகாணத்தைச் சேர்ந்த பஹீமஜஹான் ஈழத்தின் வடக்கில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சித்தாந்தன், துவாரகன், வன்னியில் கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் முதலியோரின் கவிதைகள் இடம்பெறுகின்றன.
தானா. விஷ்ணுவும் பொன். காந்தனும் முள்ளிவாய்க்கால் போர்த்துயரத்தை இறுதிவரை அனுபவித்து மீண்டவர்கள். இந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை இவர்கள் மிக முக்கியமான சாட்சிகள்.
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்கள் ஈழப் போராட்டத்திலும் ஈழ மக்களின் வாழ்க்கையின் இன்றைய கால கட்டத்தில் பல்வேறு நகர்வுகளுடன் தொடர்புடையவர்கள். இந்தக் கவிஞர்கள் தொண்ணூறுகளிலிருந்து இன்று வரை எழுதிக் கொண்டிருப்பவர்கள்.
ஈழப்போரட்டம் மிகப் பெரிய எழுச்சியையும் வீழச்சியையும் இந்த இருபது ஆண்டுகளில் கண்டிருக்கிறது. இந்த எழுச்சியோடும் வீழச்சியோடும் இந்தத் கவிஞர்கள் பயணித்திருக்கிறார்கள். அதனுடன் நெருங்கியிருந்திருக்கிறார்கள். அழிவின் விளிம்புவரை பயணித்திருக்கிறார்கள். எல்லாவிதமான பார்வைகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் இப்போராட்டத்தை எதிர்நோக்குபவர்கள். இதற்காய் பங்களித்திருக்கிறார்கள்.
அனார் ஈழப்பெண் கவிதைகளில் நவீன முகமாய் முக்கியம் பெறுபவர். பெண்ணுடல் பெண்மொழி என்று தனித்துவமிக்க திசையில் அவரது கவிதைகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. பஹீமாஜான் அரசியல் சர்ரந்த பார்வையும் புரட்சித்தனமும் கொண்ட கவிஞர். ஈழத்து கவிதைகளில் அவர் தனக்கான தனியிடத்தை உருவாக்கியிருக்கிறார். நம்பிக்கையையும் வலிமையையும் இவரது கவிதைகள் தருகின்றன.
துவாரகனும் சித்தாந்தனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணம் மூடுண்டு இராணுவ வலயமாகிய பொழுது இவர்களது கவிதைகள் அந்த வாழ்க்கையை அச்சமும் இருளுமாக பதிவு செய்தது. வார்த்தைகள் தடை செய்யப்பட்ட காலத்தில் குரல்கள் முறிக்கப்பட்ட காலத்தில் இவர்களின் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
அச்சம் மிகுந்த வாழ்வின் குரூரத்தை சித்தாந்தன் சித்திரித்திருக்கிறார். அதே வாழ்வை துவாரகன் கேலி செய்கிறார். இந்த இரண்டு அணுகுமுறைகளும் இக்கவிஞர்களின் கால கட்ட அரசியலின் எதிர்வினையாகவும் மெனளமாகவும் கேலியாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
கிழக்கு மகாணத்தின் மண்வாசனையையும் இயற்கையையும் யுத்தம் உருவாக்கிய பயரங்கர சூழலையையும் பற்றி அலறி எழுதுகிறார். இத்தலைமுறையில் அலறி முக்கியமானவர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த நான் வன்னியில் போர்ச் சூழலிலும் பின்னர் யாழ்ப்பாண இராணுவ பிரதேசத்திலம் வாழ்ந்த பொழுது இந்தக் கவிதைகளை எழுதியிருந்தேன். யுத்தம், வாழ்வு, கொலை, இரத்தம், அச்சம் முதலிய சூழலில் நான் வாழ்ந்திருந்த பொழுது அந்த வாழ்க்கையை இக்கவிதைகளில் எழுதினேன்.
முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது. அவை ஈழத்தின் அரசியல் குறியீடுகள். மனசாட்சியுள்ள எந்த மனிதர்களும் மறுத்துவிட முடியாது. கொல்லப்பட்ட மக்களுக்காக வாழும் விடுதலையை வாழும் கனவை அவாவிக் கொண்டிருக்கிறோம். மரணத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை மீள கட்டி எழுப்ப வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
வாழ்வது என்பது எங்களின் மாபெரும் கனவு. வாழ்வதற்காகவே இத்தனை துயரங்களை கடந்தோம். இத்தனை துயரங்களைச் சுமந்தோம். இப்பெரும் துயரினதும் மனிதப்படுகொலையினதும் பின்னர் மரணத்தில் துளிர்க்கும் கனவாக ஒன்றாய் வாழ்தலுக்கான குரலாய் ஈழத்தின் தமிழ் பேசும் சமூகத்திடமிருந்து இந்தக் கவிதைகளை ஒன்றாய் தருகிறோம் என்று தீபச்செல்வன் குறிப்பிட்டார்.