ஜூலை 06, 2019

தனிநபர் ஆவணக் களஞ்சியம் அம்பலம் விஜயநாதன்   மறைந்த அம்பலம் விஜயநாதன் அவர்களின் நினைவுகளினூடே அவரின் சில பண்புகளை இங்கு எழுதுதல் பொருத்தமென எண்ணுகிறேன். ஆசிரியராக அதிபராக இலக்கிய வாசகனாக சிறந்த பேச்சாளராக தேடல் மிக்கவராக ஆன்மீக நாட்டமுள்ளவராக சமூகச் செயற்பாட்டாளராக அவரை நோக்கமுடிகிறது.

   ஓர் இலக்கியகாரனாக நோக்குகின்றபோது அவரின் ஆர்வங்களை மூன்று நிலைகளில் குறிப்பிடலாம்.

   ஒன்று, தீவிரமான வாசகனாக அவரை நோக்கலாம். பிரதேசங்களில் நடைபெறும் இலக்கிய மற்றும் சமூகஞ் சார்ந்த நிகழ்வுகளில் அதிகமும் கலந்து கொள்வார். இலக்கிய சஞ்சிகைகளை விரும்பி வாசிப்பதோடு அல்லாமல் அந்நிகழ்வுகள் பற்றியும் குறித்த படைப்புக்கள் பற்றியும் சார்ந்தவர்களுடன் உரையாடுவதில் மிகுந்த பிரியமுள்ளவர். நிறைவுகளைச் சுட்டிக்காட்டிப் பாராட்டவும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் வழிகூறுவார். வாசிப்பின் வழியாகத் தன்னைப் புடம்போட்டு சமூக முன்னேற்றம் கருதிய கருத்துக்களை முன்வைக்கவும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டவர்.

   இரண்டாவது அம்சம் பிரதேசம் சார்ந்த ஆவணங்களைப் பேணிக் காத்தல். சமூக மேன்மைக்காக உழைத்த பெரியவர்கள், சமூக முன்னோடிகள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வைத்து தக்க சமயத்தில் உதவக்கூடிய மனப்பாங்கு கொண்டவராக அவரை இனங்காண முடிகிறது. அண்மையில் அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா தொடர்பான படைப்புக்களின் முழுத்திரட்டையும் தொகுக்க முனைந்தபோது கவிஞர் செல்லையா அவர்கள் 1932 இல் எழுதிய “தேசிய கீதம்” என்ற அரிய பிரதியைக் கொடுத்து அத்தொகுப்பு முயற்சிக்கு உதவியிருக்கிறார். அதனை அந்நூலின் பதிப்புரையிலும் பதிவு செய்துள்ளார்கள். இதுபோன்ற பலரின் தேடல்களுக்கும் முயற்சிகளுக்கும் உதவியிருக்கிறார். இவ்வகையில் அவரை ஒரு தனிநபர் ஆவணக்களஞ்சியமாகக் கருதமுடிகிறது.

   மேற்கூறிய இரண்டு அம்சங்களினூடாகவும் வெளிவரக்கூடிய மற்றைய பண்பே அவரின் எழுத்து முயற்சிகளாகும். அவர் 2006 ஆம் ஆண்டு எழுதிய ‘வரகவி’ என்ற நூல் முக்கியமானதாகும். “வரகவி க.வே. சின்னப்பிள்ளை வைத்தியர்” பற்றிய பல செய்திகளை அந்நூல் நமக்குத் தருகின்றது. 1850 களில் வதிரியிலும் அல்வாயிலும் திண்ணைப்பள்ளிக்கூட மரபு இருந்த வரலாற்றை
“வதிரியில் வேலுச்சட்டம்பியாரும் அவர் மகன் வைத்தியர் ஆழ்வாரும், அல்வாயில் வேலுச்சோதிடரும் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் வைத்துக் கல்வி புகட்டி வந்தனர். இத்திண்ணைப் பள்ளிக்கூடங்கள் படிப்புடன் நின்று விடாது சமய மரபுகளையும் வழக்காறுகளையும் பேணிவந்தன . தமது மாணவர்களுக்கு சோதிடம், வைத்தியம், தோத்திரங்கள் ஆகியவற்றையும் சட்டம்பிமார் கற்பித்தனர். இதனாலேயே சின்னப்பிள்ளை வைத்தியர் அவர்கள் கவிஞனாகப் பரிணமிக்க முடிந்தது.” (அ. விஜயநாதன், வரகவி)

   என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு எழுத்துவழி வந்த ஆதாரங்களையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவ்வாறான கட்டுரைகள் ஊடாக எமது சமூகத்தினரின் கல்விவழி வரலாற்று வேர்களைத்தேடிச் சென்று ஆவணமாக்கும் பயனுள்ள பணியைச் செய்துள்ளார்.

 கலாவிநோதன் எம்.பி அண்ணாசாமி, பாராளுமன்ற உறுப்பினர் த.இராஜலிங்கம், அதிபர் மூ.சி சீனித்தம்பி ஆகியோர் குறித்து எழுதிய கட்டுரைகளும் இவ்வாறான சமூகநோக்கங் கருதிய அவரின் தேடலை நினைவுபடுத்துகின்றன. ஆ.ம செல்லத்துரை ஆசிரியர் பற்றிய கட்டுரையொன்றும் இறுதியாக எழுதினார் என அறியப்படுகிறது.

       இவ்வகையில் அம்பலம் விஜயநாதன் அவர்கள் தனது எழுத்துக்களின் வழி தன்னை ஓர் இலக்கியக்காரனாகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் இளையவர்களுக்கு வழிகாட்டும் ஆவணக்களஞ்சியமாகவும் வெளிக்காட்டியுள்ளார். அன்னாரின் சமய, சமூக ஈடுபாடுகளும் இவ்வாறு நோக்கத்தக்கவை. அவரின் கட்டுரைகள் முழுத்தொகுப்பாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படவேண்டும் என்று இந்நாளில் வேண்டிக்கொள்கிறேன்.

கலாநிதி சு.குணேஸ்வரன்