அக்டோபர் 02, 2021

இலக்கியம் தந்த நட்பு

 

அண்மையில் குமிழி நாவலை எழுதி  வெளியிட்ட சுவிஸ் ரவி அவர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல்  கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டன. தற்போதைய கொவிட் சூழலில்  கற்றலுக்கு மிக அவசியமான பாட அலகுகளைத் தெரிவு செய்து தொண்டைமானாறு  வீரகத்திப்பிள்ளை  மகாவித்தியாலய  ஆசிரிய நண்பர்களின் உதவியுடன் தரம் 5, க.பொ.த சாதாரணதரம் மற்றும்  உயர்தரப்பிரிவு மாணவர்களுக்குத் தேவையான கையேடுகள் (வித்தியாலய பாட ஆசிரியர்கள் தயாரித்தவை, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைத் திணைக்களத்தின் புள்ளித்திட்டம், துறைசார்ந்தவர்களின் குறிப்புகள் ஆகியவை ) வழங்கப்பட்டன.

தரம் 5ற்குரியது, தமிழ் (O/L), ஆங்கிலம், விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம், தமிழ் (A/L), அளவையியல் , நாடகமும்அரங்கியலும் முதலான கையேடுகள் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இவற்றில் க.பொ. த சாதாரணதரம், மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான தமிழ்ப்பாடத்திற்கான ஒரு தொகுதி கையேடுகள் சிதம்பரக் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.

ரவி அவர்கள் குமிழி நாவல் விற்பனை மூலம் பெறப்பட்ட இருபத்தையாயிரம்  ரூபாவை அனுப்பி வைத்து இந்தப் பணத்தை உங்கள் மாணவர்களுக்குப் பயன்படுத்துங்கள் என்று கூறியிருந்தபோது என்ன செய்யலாம் என ஆசிரிய நண்பர் ரூபரஞ்சனுடன் ஆலோசித்து இறுதியில் இந்த முயற்சியை மேற்கொண்டோம். கொவிட் பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 3 கட்டங்களாகப் பிரதிசெய்து தந்த சர்மிலன் பிறிண்டேர்ஸ்  இன்பனுக்கும் கையேடுகளைத் தெரிவுசெய்து தந்த ஆசிரியர்களுக்கும் நண்பர் ரவி அவர்களுக்கும் மேலான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-சு.குணேஸ்வரன் 
முன்னைய செய்தி ஒன்றும் இங்கே உள்ளது. 

மேலும் சில படங்கள் 








செப்டம்பர் 22, 2021

அதிபர் இரா. ஶ்ரீநடராசா : பணி நிறைவும் பிறந்தநாள் வாழ்த்தும்

 


எமது அதிபர் இரா. ஶ்ரீநடராசா அவர்கள் இன்றையதினம் (14.09.2021) தனது பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

அவர் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தில் ஆற்றிய பணிகள், பெற்ற சாதனைகள், தொண்டைமானாறு கிராமத்தின் கல்வி மற்றும் சமூகச் செயற்பாடுகளில் அவர் முன்னின்று செயற்பட்ட காலங்கள் முக்கியமானவை.
80களின் நடுப்பகுதியில் இருந்து 92 வரை இயக்கங்களினதும் படைகளினதும் நெருக்கடிகளில் இருந்து இடைநிலைக் கல்வியையும் உயர்தரக் கல்வியையும் கற்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். அந்தக் காலங்கள் மறக்கமுடியாத நினைவுகளை மீட்டக்கூடியவை.
அப்போது தொண்டைமானாறு கெருடாவில் பிள்ளைகளின் கல்வி மற்றும் சமூகச் செயற்பாடுகளில் இளைஞர்களும் பெரியவர்களும் இணைந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். வாணி அக்கடமி, யுனைற்றர் எடியுகேசன் சென்ரர், செல்வி கலாலயம், பின்னர் லிப்கோ அக்கடமி, மறுபுறத்தில் கெருடாவில் விவேகானந்தா கல்வி நிலையம், பிறைற் எடியுகேசன் சென்றர், முதலானவை இந்தப் பணியில் அப்போது காலத்துக்குக் காலம் இணைந்திருந்தன.
80 களில் அவரிடம் இடைநிலைக் கல்வியை கற்றேன். இன்று எழுத்தாளர் குந்தவை வசிக்கும் வீட்டுச் சூழலில் வாணி அக்கடமி என்ற கல்வி நிலையம் இயங்கியது. ஶ்ரீநடராசா அப்போது சைக்கிள் ஓடமாட்டார். நாங்கள் வகுப்புத் தொடங்கும் முன்னர் அவர் வீடு சென்று அவரை சைக்கிளில் ஏற்றி வருவோம். விஞ்ஞான பாடம் கற்பித்தவர், சித்திரமும் கற்பிப்பார். இவருடன் சமகாலத்தில் கல்வி கற்பித்த இளைஞர் தலைமுறையொன்றும் அப்போது இருந்தது. அது பற்றித் தனியாக எழுதவேண்டும்.
இந்திய இராணுவத்தின் நெருக்கடி காலத்தில் நாங்கள் பாதுகாப்பாகக் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக முதல் முதல் க.பொ. த உயர்தர வகுப்பை லிப்கோ அக்கடமியில் தொடங்கியவர். அக்காலங்களில் ஒரு பக்கத்தில் பிள்ளைபிடிகாரர்களையும் மின்கம்பங்களையும் பார்த்துக் கொண்டும் அடிஉதை வாங்கியும் படித்த காலங்கள் நினைவுகளில் எழுகின்றன.


எங்களை முதல் முதல் பட்டிமன்றம் ஏற்றிப் பேசவைத்தவர். இப்போ தொண்டைமானாறு வல்லைவீதியில் இருக்கும் கலைமகள் சனசமூகநிலையத்தில் பெரியளவில் எடுக்கப்பட்ட விழாவில் எங்களை அரங்கேற்றியவர்.
மிகச் சிறந்த ஓவிய வல்லுநர்கூட. எங்கள் வீட்டில் அப்பா வைத்திருந்த கம்பி லொறி, மொட்டை லெறி, A40 வான் முதலானவற்றுக்கு சைக்கிளில் ஏற்றி வந்து பெயர் எழுத வைத்திருக்கிறோம். அப்போது பெயர்ப் பலகைகள் எழுதுவதிலிருந்து வாகனங்களுக்கு பெயர் எழுதுவது, ஆலய திரைச் சீலைகளில் படம் வரைவது, ஓவியம் வரைவது வரை அவரின் கைவண்ணத்தில் காணக்கிடைத்தன.
கல்வி முயற்சிகள், கலை நிகழ்ச்சிகள் எல்லாம் அவரின் பட்டறையிலிருந்துதான் நாங்கள் தொடங்கினோம்.
பின்னர் தொண்டைமானாறு வித்தியாலத்தில் அவர் அதிபராகியபோதே அவருடனான பிற்காலத் தொடர்புகள் விரிந்தன.

அவரின் காலத்தில் பாடசாலை 4 முறை தேசியத்தில் கால் பதித்திருக்கிறது. விளையாட்டில் இரண்டு தடவையும், கலைத்துறையில் இரண்டு தடவையும் தனது முத்திரையைப் பதித்தது. கல்வி அடைவுகள் முதல் கிராமத்தின் ஆன்மீக, சமூகச் செயற்பாடுகளிலும் அவரின் பங்களிப்பு இருந்திருக்கிறது.
இன்று காலம் மாறிவிட்டது. மனிதர்கள் மாறிவிட்டார்கள், மனிதர்களின் குணங்களும் மாறிவிட்டன. அடிப்படை வசதிகள் இல்லாத சிறிய குக்கிராமங்களில் இருந்து வெளியே வரும் ஒவ்வொருவரின் உயர்வுக்கும் பின்னால் அதிபர் ஶ்ரீநடராசா போன்றவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் வழிகாட்டலும் மறைந்திருக்கிறது. அன்று நான் பார்த்த ஶ்ரீநடராசா அவர்களின் அன்பும் அரவணைப்பும் பண்பும் இன்றும் மாறவேயில்லை. அவரின் ஓய்வுகாலம் ஆரோக்கியத்துடன் சிறக்க வேண்டும்.
அன்பு மாணவனின் இனிய
வாழ்த்துக்கள்
.
கலாநிதி சு.குணேஸ்வரன்

ஜனவரி 26, 2021

குருகுலத்தில் -1

 மாணவருக்கு,

கல்வி அமைச்சும் தேசிய கல்வி நிறுவகமும் இணைந்து முன்னெடுத்திருக்கும் (ரூபவாகினி ஐ தொலைக்காட்சி) "குருகுலம்" கல்வி நிகழ்ச்சியில் தமிழ்ப்பாடம் தொடர்பான எனது காணொளிகள்

தரம் 6 தமிழ்



தரம் 9 தமிழ்



https://youtu.be/PFoLWuhWI7s