நவம்பர் 23, 2026

கவிஞர் சேரனுக்கு அஞ்சலி



    ஈழத்து நவீன கவிதையின் சிடுக்குகளை, சேரனின் கவிதைகளைக் காவித் திரிந்து கதைத்துக் கொண்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். சேரனின் சில கவிதைகள், கருத்துக்கள் எப்போதும் நினைவில் நீள்பவை. ராஜினி திரணகம இறந்தபோது சேரன் எழுதிய கவிதையும் காலச்சுவடு இதழுக்கு அளித்த நீண்ட நேர்காணலும் புலம்பெயர் படைப்புகள் பற்றிப் பேசத்தொடங்கியபோது 'ஆறாந்திணை' என்றும் 'அலைந்துழல்வு வாழ்வு' என்றும் அவர் உதிர்த்த வார்த்தைகள் மீளவும் மீளவும் என் நினைவில் வருவன. எனது ஆய்வேட்டில் சேரன் கவிதைகள் பற்றி எழுதிய சிறிய பகுதியைத் தருகிறேன்.
    தீவிரமான அரசியல் வெளிப்பாட்டுடன் கூடிய கவிதைகளைப் படைத்தவர்களில் கவிஞர் சேரன் முதன்மையானவர். மானிட நேயம், போர் எதிர்ப்பு, ஈழத்து அரசியல் முரண்பாடு, வன்முறைகளுக்கும் ஆதிக்கத்திற்கும் எதிரான போர்க்குரல் என்பன சேரனது கவிதைகளின் தனிப்பண்புகளாகச் சுட்டத்தக்கன. சேரனின் 'எரிந்து கொண்டிருக்கும் நேரம், எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' தொகுதிகளிலுள்ள கவிதைகளில் இந்த எதிர்ப்பு உச்சம் பெறுவதை அவதானிக்கலாம்.
மரணத்துள் வாழ்வோம் தொகுப்பில் 'எல்லாவற்றையும் மறந்து விடலாம்..' என்ற சேரனின் கவிதையின் தொடர்ச்சி பின்னர் வெளிவந்த 'மீண்டும் கடலுக்கு' தொகுப்பிலுள்ள 'துண்டிக்கப்பட்ட காலின் கதை' கவிதைவரை அந்த இழையின் தொடர்ச்சி இன்னமும் உள்ளதும் குறிப்பிட்டே ஆகவேண்டும். இதற்கு சேரனின் கூற்றே ஆதாரமாயிருக்கின்றது.
'முன்னைய பல கவிதைகள் இன்னும் முற்றுப் பெறாதவையாக எனக்குத் தோன்றுகின்றன. அந்த முற்றுப்பெறாமையின் சில தளத் தொடர்ச்சிகள் இந்தத் தொகுதியிலும் வேறு உருவிலும் வேறு உணர்வு நிலையிலும் இடைவிடாது தொடர்கின்றன எனவும் தோன்றுகிறது. தொடர்ந்து பெருகிக் கொண்டிருக்கும் ஊற்றின் பல்வேறு கணங்களையும் முகங்களையும் சித்திரிக்க எத்தனிக்கும் இடையறாத முயற்சிதான் இந்தக் கவிதைகள்.'
    என்று எழுதியிருக்கிறார்.
கவிஞர் சேரன் தனது கவிதைகளால் பின்வந்த கவிஞர்களிடத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். நவீன கவிதையின் உத்திகளைக் கருத்திற் கொண்டு குறிப்பாக, படிமமும், ஓசைநயமும் கொண்டதான கவிதை புனையும் போக்கு சேரனிடம் அவதானிக்கலாம். உணர்வும் உணர்ச்சியும் இணைந்து அறிவுக்கும் தார்க்கத்துக்கும் இடையில் நடைபோடுவன சேரனின் கவிதைகள்.

- சு. குணேஸ்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக