ஜூன் 20, 2015

"வாசிப்புக்கும் நட்புக்கும் இலக்கணமான வரதண்ணா"
  ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர்களில் ஒருவராகிய வே.ஐயாத்துரை அவர்களின் மகனும் கவிஞருமாகிய வே.ஐ வரதராஜன் இன்று காலை (20.06.15) மறைவடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தோம்.கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும் அண்மைக்காலத்தில் ஓரளவு அதிலிருந்து தேறியிருந்தார். எனினும் எம்மை ஏமாற்றிவிட்டார்.

   எனது மனைவிக்கு அண்ணன் முறை உறவினரானபோதிலும் நான் அன்புடன் வரதண்ணா என்றுதான் அழைப்பேன். அரியாலைக்கும் அல்வாய்க்கும் ஒரு இணைப்புப்பாலம் போல் எங்கள் உறவுகளோடு உறவாக வந்து போய்க்கொண்டிருப்பார். தந்தை ஐயாத்துரையின் கவிதைப் பாரம்பரியத்திற்கு ஊடாக வந்த வரதராஜன் அவர்கள் அடிப்படையில் ஒரு தீவிர வாசகன்.

  வாசிப்புக்கும் எழுத்துக்கும் நட்புக்கும் இலக்கணமாக எனக்கு முன்நிற்கும் உதாரண புருஷன் வரதண்ணாதான். எனது திருமண உறவோடு தொடங்கிய வரதண்ணாவின் நட்பு இன்று வரையும் நீடித்திருப்பதற்கு உறவுவழித் தொடர்பு என்பதையும் தாண்டி இலக்கியத் தொடர்புதான் முதன்மையாக இருந்துள்ளது.

  நான் அறிந்த வரையில் யாழ்ப்பாணத்தில் இவரைப்போல தீவிர இலக்கிய நேசர்களைக்காண்பது மிக அரிது. ஈழத்து எழுத்தாளர் முதல் தமிழக எழுத்தாளர் வரை மேலைத்தேய எழுத்துக்கள் முதல் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் வரை தீவிரமாக உரையாடுவார். அவரின் வாசிப்புக்கும் பட்டறிவுக்கும் ஏராளமாக நூல்களை எழுதியிருக்கமுடியும். ஆனால் மிகத் தாமதமாகவே கவிதை மற்றும் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டார். கலைமுகம், ஞானம், ஜீவநதி இதழ்கள் மிகக்கூடிய அக்கறையெடுத்து அவரின் படைப்புக்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தன. இவை தவிர வேறு பல இதழ்களிலும் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார். கலைமுகம் இதழ் விரிவான நேர்காணல் ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அவரின் “என் கடன்” என்ற கவிதைத்தொகுப்பு ஜீவநதி வெளியீடாக வெளிவந்திருக்கிறது.


  வரதராஜனிடம் நான் கவனித்த மிக முக்கியமான மற்றொரு பண்பு நட்புப் பாராட்டுவது. அவரவரின் தகுதிக்கு ஏற்ப உரையாடுவதிலும் கூடியவரையில் நட்பைப் பேணுவதிலும் மிகுந்த நாட்டமுடையவர். ஒரு புத்தகம் அவரின் கைக்குச் செல்லுமானால் அந்த நூலை மிகக்குறைந்தது மூவராவது வாசித்திருப்பார்கள். அதையும் சொல்லித்தான் வாங்குவார். நான் இதை இன்னாருக்கும் வாசிக்கக் கொடுப்பேன் என்பார்.

   அவருடன் ஒரு நூல் பற்றியோ அல்லது எழுத்தாளர் பற்றியோ உரையாடுவது மிகுந்த இன்பமளிப்பதாகும். எனக்கு நல்ல மொழிபெயர்ப்பு நூல்களை அறிமுகம் செய்தவர். எனது வாசிப்புக்கும், ஆய்வுத்தேவைகளுக்கும் பல வழிகளில் உதவியிருக்கிறார். தன்னிடம் இல்லாவிட்டாலும் எங்கே இருக்கிறதெனத் தேடித்தந்திருக்கிறார்.

   தனது தந்தையார் ஐயாத்துரை நினைவாக வருடாவருடம் யாழ் இலக்கிய வட்டத்தின் அனுசரணையுடன் குறித்த வருடத்தில்வெளிவந்த சிறந்த கவிதை நூலைத்தெரிவு செய்து அன்னாரின் குடும்பத்தினர் கவிஞர் ஐயாத்துரை விருதினை வழங்கி வந்துள்ளார்.

   ஈழத்தில் எந்த வொருஇலக்கிய நிகழ்விலும் தவறாமல் கலந்து கொள்வார். ஈழத்துச் சஞ்சிகைகளை வாங்கி மற்றவர்களையும் ஊக்குவிப்பார். தந்தையாரின் மரபுக்கவிதைப் பின்னணியில் இருந்து வந்தாலும் அண்மைக்கால கவிதைப்போக்குக்கு சமாந்தரமாகப் பயணிக்கக்கூடிய கவிதைகளைத் தந்திருக்கிறார். அவரின் தொடர்ச்சியான வாசிப்பும் சமூகத்தை நுண்மையாக அவதானிக்கும் பண்பும் அவரின் கவிதை மொழியில் எளிமையையும் பிரச்சினையின் தீவிரத்தையும் எடுத்துக்காட்டுவனவாக அமைந்திருந்தன.

   பல நூல்கள் பற்றி உரையாடும்போது “இதைப்பற்றி ஒரு கட்டுரையாக எழுதுங்கள் அண்ணா” என்றால் “சரி பார்ப்போம்” என்பார். ஆனால் எழுதமாட்டார். அடுத்தகணம் புதிதாக வந்த நூலுடன் இருப்பார். வாசிப்பதில் ஒரு சுகானுபவத்தைக் காண்பவர். நண்பர்களின் நட்பில் தோய்பவர். இன்று (20.06.15) காலை, அவரின் உயிரற்ற உடலின் முன்னால் தலைமாட்டில் திருமறைக்கலாமன்றம் நடாத்தவிருக்கும் மூன்றுநாள் இலக்கிய விழாவுக்கான அழைப்பிதழ் அவரின் முகவரியுடன் இருந்ததையும் கண்டேன். உள்ளங் கலங்கி விட்டது.

   இனி அவரின் எழுத்துக்கள் மட்டுமே அவரின் நினைவுகளாக எம்மிடம் எஞ்சியிருக்கப் போகின்றன.

- சு. குணேஸ்வரன்

வே.ஐ. வரதராஜனின் 'என் கடன்' கவிதைநூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக