ஆகஸ்ட் 12, 2012

என்னைப் பற்றி - சி. ரமேஸ்



 எட்டு ஈழக்கவிகளின் தொகுப்பாக ஆழி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "மரணத்தில் துளிர்க்கும் கனவு" என்ற  நூலுக்கு சி. ரமேஸ் எழுதிய மதிப்பீட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"ஈழத்து சமகால வாழ்வியலை நுண் அரசியலோடு இணைத்து இயல்பான மொழியில் கவிதைகளுக்கூடாக மென் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் துவாரகன் ஆவார்.சிக்கலில்லாத வாழ்வின் அர்த்தங்களைத் தேடும் இவரது கவிதைமொழி வாழ்வின் அனுபவங்களுக்கூடாகக் கட்டுருபவை.அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் வாழ்வின் அபத்தங்களை எழும் வலிகளை எளிமையாகவும் நேர்த்தியாகவும் அங்கதமாகவும் வெளிப்படுத்தும் துவாரகன் கவிதைகள் சமகால நிகழ்வின் பதிவுகள்.

குழந்தைகள் முதல் முதியோர் வரை யாவரையும் குருதியுமிலும் கோரப்பற்களுடன் காவு கொள்ளும் மரணம், எம் தேசத்தில் தெருவோரங்களிலும் வெளிகளிலும் பதுங்கியுள்ளது. பிணம் தின்னும் கழுகு போல் காத்துக் கிடக்கும் மரணத்தை எவ்வித பிசிரலுமின்றி ‘ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது’ என்னும்  இவரின் கவிதை தத்துருபமாகப் பதிவு செய்கிறது.

“நடந்து செல்லும் வயல் வரம்புகளில்
படுத்திருக்கும் பாம்புகள் போல்
வீதிகளின் வெளியெங்கும்
பதுங்கியிருக்கிறது மரணம் 

கலகலப்பான மழலைக் குரல்களையும் 
தம் நீண்ட பிரிவின் பின்னான 
உறவுகளையும்
தம் கடமை முடிக்க விரையும் 
எல்லோரையும் தோற்கடித்து 
வெடித்துச் சிதறடிக்கும் 
ஒரு வெடிகுண்டைப் போல் 
காத்திருக்கிறது மரணம்”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -78)


இராணுவ அரண்களுக்கு அருகாமையில் நாம் செல்லும் போது மீண்டும் மீண்டும் எம்மை நாமே பரிசீலித்து வாழ வேண்டிய துர்ப்பாக்கிய  நிலைக்குள்ளாகிறோம். இவ்வலநிலையை அங்கதமாகவும் அதேசமயம் அழுத்தமாகவும் வெளிப்படுத்துகிறது ‘மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்’.

“ஓடிய சைக்கிளில் இருந்து 
இறங்கி நடந்து 
ஓட வேண்டியிருக்கிறது
போட்ட தொப்பி 
கழற்றி போட வேண்டியிருக்கிறது
எல்லாம் சரிபார்த்து மூடப்பட்ட 
கைப்பை 
மீளவும் திறந்து திறந்து 
மூடவேண்டியிருக்கிறது
என் அடையாளங்கள் அனைத்தும் 
சரியாகவே உள்ளன 
என்றாலும்
எடுக்கவும்  பார்க்கவும் வைக்கவும் வேண்டியிருக்கிறது”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -73)

அச்சத்துடனும் ஆற்றாமையோடும் ஒவ்வொரு ஈழக்குடிமகனும் கழித்த வாழ்நாட்களை கண்முன் நிறுத்தும் இக்கவிதை காலத்தோடு கருத்தூன்றி நிற்கிறது.நாதியற்று வெறுமனே கழியும் பொழுதுகள், எம்மை கேட்காமலே எம்மிடம் இருந்து பறிக்கப்படும் எம் உடமைகள், எல்லைகளின்றி காத்திருப்பின் நடுவே பழுத்துப்போன இலைகளாய் உதிரும் வாழ்வு என மூடுண்ட நகரத்தின் அகப் புறவெளிகளைக்காட்சிப்படுத்தும் துவாரகனின் கவிதைகள் மனித துயரின் பதிவுகளாய் அவற்றின் சாட்சிகளாய் விளங்குபவை."

கட்டுரையை தொடர்ந்து வாசிக்க
http://eathuvarai.net/?p=1255

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக