மே 04, 2020

கொரோனாப் பொழுதுகள் - 1




   உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவினால் மனிதர்களின் பாடுகள் பலவிதமானவை. அடிப்படை வசதிகள் மட்டுமட்டாக இருக்கும் மக்களின் பாடுகள் ஒருபுறமும் ஓரளவு பொருட்களைக் கொள்வனவு செய்து வைத்திருப்பவர்கள் மறுபுறமுமாக காலம் கடந்து கொண்டிருக்கிறது.

 இவற்றுக்கு மத்தியில் உதவி தேவைப்படும் மக்களுக்கு பொதுஅமைப்புக்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தனிப்பட்ட நபர்களும் செய்யக்கூடிய உதவிகளை நிச்சயமாக வரவேற்க வேண்டும். அதேநேரம் இரவுபகல் பாராது மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு உழைக்கும் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவற்துறையினர், படையினர், சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றும் வர்த்தகர்கள், சமூக அக்கறையுடையோர் முதலானோரின் பணிகள் நினைக்கப்படவேண்டியவை.

   வைத்தியர்களின் அறிவுறுத்தல்களை கருத்திற்கொண்டு மக்கள் தங்களால் முடிந்தளவு பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். இதற்குள் அவசிய தேவைகள் எதுவுமற்று "புதினம் புடுங்க" குறுக்கால் ஓடுபவர்களும் எந்தச் சிந்தனையுமில்லாமல் திரிபவர்களுக்கும் அருகில் இருப்பவர்கள்தான் அமைதியாக எடுத்துக்கூறி சமூக ஒழுங்கினை நெறிப்படுத்தவேண்டும்.

 குடும்பத்தில் இருக்கும் அங்கத்தவர்களை மிக அமைதியாகக் கையாளவேண்டிய தேவையும் ஒவ்வொரு குடும்பத்தலைமைக்கும் அந்தந்தக் குடும்ப உறுப்பினர்களை வழிநடாத்தும் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டி மிக முக்கியமான பொறுப்பாக இருக்கிறது.

  எமது குடும்பங்களிலும் அயலிலும் இருக்கும் படிக்கும் பிள்ளைகளை கவனமாக வழிநடாத்தவேண்டிய காலம் இதுவாகும். அவர்களின் உடல்நலத்தைக் காக்கின்ற அதேவேளை அவர்களின் உளநலத்திலும் அக்கறையுடன் செயற்படவேண்டியுள்ளது. பிள்ளைகளை நேரஒழுங்கில் படிக்க வைக்கலாம். இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற பாடக்குறிப்புக்களும் பயிற்சிகளும் (online) இணையத்தில் கற்றலுக்கும் அதிகமான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஓவியம் வரைய வைக்கலாம். நல்ல திரைப்படங்களைப் பார்க்கலாம். கதைப்புத்தகங்களை வாசிக்க வைக்கலாம். விளையாட்டுக்களில் பொழுதுபோக்கலாம்.

   வள்ளுவர் "வான்சிறப்பு" என்ற அதிகாரத்தில் நீரில்லாவிடில் உலக ஒழுங்கும் குலையும் என்று கூறினார். உண்மையில் நீருக்கும் ஒழுக்கத்திற்கும் என்ன தொடர்பு என்றுகூட பலர் யோசிக்கலாம். அதேபோல் கோரோனாவினால் சமூக ஒழுங்கு குலைவதற்கு யாரும் காரணமாக இருக்கக்கூடாது.

  வீட்டில் இருக்கும் பெரிய மனிதர்கள் பொறுப்பானவர்களாக நடந்து கொள்ளவேண்டும். அல்லாவிட்டால் பக்கத்துவீட்டாரின் நாயைக் கட்டிவைத்ததற்காக ஒரு இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டான் என்ற செய்திபோல எமது சமூக ஒழுங்கும் குலைந்துவிடும். அவதானமாக இருப்போம். அருகில் இருப்பவரையும் காப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக