டிசம்பர் 23, 2019

நீள்கரைப் பயணம் - 1



(19.12.2019)

மறுபாதி குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கியப் பயணமாக அமைந்த "நீள்கரைப் பயணத்தில்" சங்குப்பிட்டி, குடமுருட்டிப்பாலம், கிளிநொச்சி,.பேராவில்,புதுக்குடியிருப்பு காட்டு அந்தோணியார் கோயில் ஆகிய இடங்களில் நண்பர் இணைந்து இலக்கியம் தொடர்பான உரையாடலில் ஈடுபட்டோம்.

இந்தப் பயணத்தில் சித்தாந்தன், தானாவிஷ்ணு, சி. ரமேஸ், குணேஸ்வரன், மயூரரூபன், யாத்திரிகன், இ.சு முரளிதரன் ஆகியோர் இணைந்து கொண்டோம். கிளிநொச்சியில் கருணாகரனும் நண்பர்களும் இணைந்து கொண்டார்கள்.

தொகுப்புக்களின் அரசியல், கவிதை வாசித்தல், வாசிக்கப்பட்ட கவிதைகள் தொடர்பாக உரையாடுதலும் அதனுடன் இணைந்த கவிதைகள் பற்றிய கருத்துக்களும், இலக்கியச் செயற்பாடுகளின் தேக்க நிலை, அடையாள இழப்பு, சமூகத்தின் பலதரப்பிலும் பல துறைகளிலும் மேலோங்கியிருக்கும் புறக்கணிப்பு நிலை, சோபாசக்தியின் புதிய நாவலான இச்சா பற்றிய விமர்சனம் முதலானவை இந்தப் பயணத்தில் பேசுபொருட்களாக அமைந்திருந்தன.

ஆரம்ப உரை சி.ரமேஸ்
https://www.facebook.com/sabapathys/videos/10219651621791380/

துவாரகனின் கவிதை வாசிப்பு :
https://www.facebook.com/sabapathys/videos/pcb.10219654156454745/10219653440916857/?type=3&theater

இ.சு முரளிதரனின் கவிதை வாசிப்பு :
https://www.facebook.com/sabapathys/videos/10219656980045333/

தானாவிஷ்ணுவின் கவிதை வாசிப்பு :
https://www.facebook.com/sabapathys/videos/10219654829471570/

கருணாகரன் உரை:
https://www.facebook.com/thanavishnu.thambithurai/videos/pcb.3385870778120901/3385826268125352/?type=3&theater

ஷோபாசக்தியின் இச்சா பற்றி :
https://www.facebook.com/sabapathys/videos/10219655150359592/



உரையாடல்களின் சில காணொளிகள் சித்தாந்தனின் முகநூல் பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ளன. விரிவான கட்டுரைகளை நண்பர்கள் எழுதுவார்கள் என எண்ணுகிறேன்.

நண்பர்களுடனான இந்தப் பயணம் மிக இனிமையானதாகவும் இலக்கியச் செயற்பாட்டில் மேலும் ஈடுபாட்டுடன் செயற்பட ஊக்கம் தருவதாகவும் அமைந்தது. நீள்கரைப் பயணத்தின் 2ஆவது தொடரை வரும் ஜனவரி 2ஆந் திகதி மேற்கொள்ளவிருப்பதாக நண்பர்கள் தெரிவித்தனர்.

(பதிவு : சு.குணேஸ்வரன், படங்கள் : நீள்கரைப் பயண நண்பர்கள்)































நவம்பர் 03, 2019

“சூழலைத் தூய்மையாக்குவோம்” விழிப்புணர்வுச் செயற்றிட்டம் -1



   கெருடாவில் வாலிபர் சங்கம் (Viber group) ஏற்பாட்டில் 03.11.2019 ஞாயிறு மாலை 3.30 மணியளவில் சூழலைத் தூய்மையாக்குவோம் என்ற விழிப்புணர்வுச் செயற்றிட்டம் -1 இடம்பெற்றது. திட்டமிட்டவாறு தொண்டைமானாறு சந்தியில் அமைந்துள்ள கோணேசர் கோவில் குளம் மற்றும் பெரியகடற்கரை சந்தைப் பகுதியை அண்டிய கடற்கரைப் பிரதேசமும் இச்செயற்பாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.  அங்கிருந்த பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருட்கள் அகற்றப்பட்டன.

   இளைஞர்களை சமூகச் செயற்பாட்டாளர்களாக ஆக்கும்  இச்செயற்பாட்டுக்கு எதிர்பார்த்த இளைஞர்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தமை ஏமாற்றத்தைத் தந்தபோதும், சிறிய அளவிலான இச்செயற்பாட்டிற்கு பங்கெடுத்தவர்களின் செயற்பாடு எமக்கு திருப்தியளிக்கக்கூடியதாக அமைந்தது. இந்த முயற்சிக்கு வல்வை நகரசபையினரின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் கிடைத்தது கூடுதல் பலமாக அமைந்தது. இம்முயற்சியில் வல்வை நகரசபைத் தவிசாளர், ஊழியர்கள் மற்றும் நகரசவை உறுப்பினர் கமல் ஆகியோரும் பங்கெடுத்தனர்.

  பங்கெடுத்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு “சூழலைத் தூய்மையாக்குவோம்” விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் 2 ஆவது செயற்பாட்டுக்கு அதிக இளைஞர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.

ஒருங்கிணைப்பு : சு.குணேஸ்வரன்
படங்கள் : கம்சிகன்






















ஜூலை 06, 2019

தனிநபர் ஆவணக் களஞ்சியம் அம்பலம் விஜயநாதன்



   மறைந்த அம்பலம் விஜயநாதன் அவர்களின் நினைவுகளினூடே அவரின் சில பண்புகளை இங்கு எழுதுதல் பொருத்தமென எண்ணுகிறேன். ஆசிரியராக அதிபராக இலக்கிய வாசகனாக சிறந்த பேச்சாளராக தேடல் மிக்கவராக ஆன்மீக நாட்டமுள்ளவராக சமூகச் செயற்பாட்டாளராக அவரை நோக்கமுடிகிறது.

   ஓர் இலக்கியகாரனாக நோக்குகின்றபோது அவரின் ஆர்வங்களை மூன்று நிலைகளில் குறிப்பிடலாம்.

   ஒன்று, தீவிரமான வாசகனாக அவரை நோக்கலாம். பிரதேசங்களில் நடைபெறும் இலக்கிய மற்றும் சமூகஞ் சார்ந்த நிகழ்வுகளில் அதிகமும் கலந்து கொள்வார். இலக்கிய சஞ்சிகைகளை விரும்பி வாசிப்பதோடு அல்லாமல் அந்நிகழ்வுகள் பற்றியும் குறித்த படைப்புக்கள் பற்றியும் சார்ந்தவர்களுடன் உரையாடுவதில் மிகுந்த பிரியமுள்ளவர். நிறைவுகளைச் சுட்டிக்காட்டிப் பாராட்டவும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் வழிகூறுவார். வாசிப்பின் வழியாகத் தன்னைப் புடம்போட்டு சமூக முன்னேற்றம் கருதிய கருத்துக்களை முன்வைக்கவும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டவர்.

   இரண்டாவது அம்சம் பிரதேசம் சார்ந்த ஆவணங்களைப் பேணிக் காத்தல். சமூக மேன்மைக்காக உழைத்த பெரியவர்கள், சமூக முன்னோடிகள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வைத்து தக்க சமயத்தில் உதவக்கூடிய மனப்பாங்கு கொண்டவராக அவரை இனங்காண முடிகிறது. அண்மையில் அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா தொடர்பான படைப்புக்களின் முழுத்திரட்டையும் தொகுக்க முனைந்தபோது கவிஞர் செல்லையா அவர்கள் 1932 இல் எழுதிய “தேசிய கீதம்” என்ற அரிய பிரதியைக் கொடுத்து அத்தொகுப்பு முயற்சிக்கு உதவியிருக்கிறார். அதனை அந்நூலின் பதிப்புரையிலும் பதிவு செய்துள்ளார்கள். இதுபோன்ற பலரின் தேடல்களுக்கும் முயற்சிகளுக்கும் உதவியிருக்கிறார். இவ்வகையில் அவரை ஒரு தனிநபர் ஆவணக்களஞ்சியமாகக் கருதமுடிகிறது.

   மேற்கூறிய இரண்டு அம்சங்களினூடாகவும் வெளிவரக்கூடிய மற்றைய பண்பே அவரின் எழுத்து முயற்சிகளாகும். அவர் 2006 ஆம் ஆண்டு எழுதிய ‘வரகவி’ என்ற நூல் முக்கியமானதாகும். “வரகவி க.வே. சின்னப்பிள்ளை வைத்தியர்” பற்றிய பல செய்திகளை அந்நூல் நமக்குத் தருகின்றது. 1850 களில் வதிரியிலும் அல்வாயிலும் திண்ணைப்பள்ளிக்கூட மரபு இருந்த வரலாற்றை
“வதிரியில் வேலுச்சட்டம்பியாரும் அவர் மகன் வைத்தியர் ஆழ்வாரும், அல்வாயில் வேலுச்சோதிடரும் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் வைத்துக் கல்வி புகட்டி வந்தனர். இத்திண்ணைப் பள்ளிக்கூடங்கள் படிப்புடன் நின்று விடாது சமய மரபுகளையும் வழக்காறுகளையும் பேணிவந்தன . தமது மாணவர்களுக்கு சோதிடம், வைத்தியம், தோத்திரங்கள் ஆகியவற்றையும் சட்டம்பிமார் கற்பித்தனர். இதனாலேயே சின்னப்பிள்ளை வைத்தியர் அவர்கள் கவிஞனாகப் பரிணமிக்க முடிந்தது.” (அ. விஜயநாதன், வரகவி)

   என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு எழுத்துவழி வந்த ஆதாரங்களையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவ்வாறான கட்டுரைகள் ஊடாக எமது சமூகத்தினரின் கல்விவழி வரலாற்று வேர்களைத்தேடிச் சென்று ஆவணமாக்கும் பயனுள்ள பணியைச் செய்துள்ளார்.

 கலாவிநோதன் எம்.பி அண்ணாசாமி, பாராளுமன்ற உறுப்பினர் த.இராஜலிங்கம், அதிபர் மூ.சி சீனித்தம்பி ஆகியோர் குறித்து எழுதிய கட்டுரைகளும் இவ்வாறான சமூகநோக்கங் கருதிய அவரின் தேடலை நினைவுபடுத்துகின்றன. ஆ.ம செல்லத்துரை ஆசிரியர் பற்றிய கட்டுரையொன்றும் இறுதியாக எழுதினார் என அறியப்படுகிறது.

       இவ்வகையில் அம்பலம் விஜயநாதன் அவர்கள் தனது எழுத்துக்களின் வழி தன்னை ஓர் இலக்கியக்காரனாகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் இளையவர்களுக்கு வழிகாட்டும் ஆவணக்களஞ்சியமாகவும் வெளிக்காட்டியுள்ளார். அன்னாரின் சமய, சமூக ஈடுபாடுகளும் இவ்வாறு நோக்கத்தக்கவை. அவரின் கட்டுரைகள் முழுத்தொகுப்பாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படவேண்டும் என்று இந்நாளில் வேண்டிக்கொள்கிறேன்.

கலாநிதி சு.குணேஸ்வரன்

டிசம்பர் 16, 2018

குந்தவையின் ‘பாதுகை’



பிடித்த சிறுகதை -
- சு. குணேஸ்வரன்

   1963 இல் ஆனந்தவிகடனில் ‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்ற முத்திரைக் கதையுடன் அறிமுகமானவர் எழுத்தாளர் குந்தவை. இவரது இயற்பெயர் சடாட்சரதேவி. யுத்தத்தின் கோரமுகங்களைத் தரிசித்து தொண்டைமானாற்றை விட்டு அகலாது தனது தளர்ந்த வயதிலும் தனியாக வாழ்ந்து வருபவர். ஈழத்தில் பெயர் குறிப்பிடக்கூடிய மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இன்றுவரையும் எழுதி வருபவர். இவரின் “யோகம் இருக்கிறது”, “ஆறாத காயங்கள்” ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.

  குந்தவையின் சிறுகதைகள் யதார்த்த வாழ்வின் பதிவுகள். ஈழத்து மாந்தர்களின் வாழ்வின் இருண்ட பக்கங்களையும் தன்னைப் பாதித்த கதைகளையும் மண்ணின் பண்பாட்டோடு அழகாக வெளிப்படுத்துபவை. இவரின் கதைகளில் வரும் காட்சிச் சித்திரிப்புக்கள் வாசகரை கதைகளோடு கட்டிப்போடக்கூடியவை.

   இவர் எழுதிய “பாதுகை” என்ற சிறுகதை பற்றி இச்சிறுகட்டுரையில் குறிப்பிடலாம். இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்ட பல பிள்ளைகளின் கதைகளில் ஒரு கதையைச் சொல்வது. அவளின் ஒரேயொரு மகன் அவளின் கண்முன்னேயே காணாமல் ஆக்கப்பட்டவன். மகன் வருவான் என எதிர்பார்த்து, தாய் எதிர்கொள்ளும் வேதனைகளும் உள்ளக்குமுறல்களும் உணர்வுபூர்வமாக இச்சிறுகதையில் பதிவாகியுள்ளது.

“வாசலில் நின்று அம்மா அம்மா என்று கூப்பிட்டான் தயாளன். உள்ளே ஒருவருமிருப்பதாகத் தெரியவில்லை. முன் எப்பொழுதாவது இந்த வீட்டின் முன்நின்று இப்பிடி அன்னியன்போல் கூப்பிட்டிருப்பானா என யோசித்தான். “ரமணா” என கூப்பிட்டுக் கொண்டு அட்டகாசமாக உள்ளே நுழைந்துதான் பழக்கம். மீண்டும் கூப்பிட்டான். வெளியிலிருந்து வீட்டைச் சுற்றிக்கொண்டு யாரோ வருவது தெரிந்தது. ரமணனின் அம்மாதான். பாதியாய் இளைத்திருந்தாள். முன்கற்றைத் தலைமயிர் வெளுத்து காற்றில் அலைந்தது. கன்னம் ஒட்டிப்போய் இருந்தது. நடுவே சுருக்கங்கள்.”

   இவ்வாறு ரமணின் தாய் இச்சிறுகதையில் அறிமுகப்படுத்தப்படுகிறார். நீண்ட காலத்திற்குப் பின்னர் தனது நண்பன் ரமணனின் நிலை தெரிந்திருந்தும், அவனின் தாயாரிடம் ஒரு முறை வரும் சக நண்பனாகிய தயாளனின் பார்வையூடாகவே இச்சிறுகதை நகர்த்தப்படுகிறது. அப்போது ரமணனோடு படித்த, பழகிய உறவாடிய காலங்கள் எல்லாவற்றையும் அவன் மீட்டுப் பார்க்கிறான். அந்தத் தாயாரோடு பல விடயங்களைப் பரிமாறிக் கொள்கிறான்.

“ஆம்பிளை செக் பொயிண்டிலிருந்து என்ரை பிள்ளை வெளியில வந்தவன் தம்பி. நான் கண்டனான் அதுக்குள்ளை என்னை பொம்பிளை செக் பொயின்ரிலை கூப்பிட்டாங்கள். நான் உள்ளை போயிட்டன். திரும்பி வந்து பார்த்தா என்ரை பிள்ளையைக் காணேல்ல. வெளியில நிண்ட தாங்கள் பிடிக்கேல்லை எண்டான். பஸ் வந்து தங்களை வவுனியாவிற்கு ஏற்றிச் செல்லுமெனக் காத்திருந்த சனத்துக்குள்ள நான் ‘விசரி’ மாதிரிச் திரிஞ்சன். என்ரை பிள்ளையைக் கண்டீங்களோ? என்று கேட்டு ஒரு நாளோ இரண்டு நாளோ? பசி தாகம் ஒண்டுமே தெரியேல்ல”


   மகனைப் பிரிந்த வேதனைகளும் வார்த்தைகளும் தயாளனையும் வாட்டுகிறது. நாளை புறப்படும்போது ரமணனின் நினைவாக ஏதாவது ஒரு பொருளை எடுத்துச்செல்லலாம் என எண்ணுகிறான். தற்செயலாக அவனின் செருப்பு கண்களுக்குப் புலப்படுகிறது. அதனை எடுத்துச்செல்ல மனம் விரும்புகிறது.

“முன் கதவைச் சாத்தப்போன வேளை கதவிற்குப் பின்னால் அந்தச் செருப்புகளை அவன் கண்டான். அவை ரமணனின் செருப்புகள். அவற்றை கிளிநொச்சியில் ரமணன் வாங்கியபொழுது அவனும் கூட இருந்தான். அவை ரமணனுக்குப் பிடித்திருந்தன. நல்ல லெதரில் சிறிய வேலைப்பாடுகளோடு கூடிய செருப்புகள். அவற்றை அதிகம் ரமணன் அணிவதில்லை. வெளியூர்களுக்குப் பாடசாலைக்குப் போகும் வேளையில் அணிவான். மற்றும்படி கறுத்த ரப்பர் பாட்டா செருப்புத்தான் போட்டிருப்பான். தயாளன் அந்தச் செருப்புகளைப் பார்த்தவாறு நிற்பதைக் கண்ட ரமணன் தாய் அருகில் வந்தான். “இது ரமணனின் செருப்பு தம்பி. இதைத்தான் ரமணன் எண்டு வைச்சுக் கொண்டிருக்கிறம். ஒரே ஆறுதல் இதுதான். இதை பக்கத்தில வைச்சுப் போட்டுப் படுத்தாத்தான் வயித்துக்கொதி அடங்கி நித்திரை வரும்” என்றாள்.அரிக்கேன் லாம்புத் திரியைக் குறைத்து வைத்துவிட்டு பாயை அவள் சுவரோரம் இழுத்துப் போடுவது தெரிந்தது. பின் போய் அந்தச் செருப்புகளை கையிலெடுத்துக் கொண்டு திரும்பி வந்தாள். இடுப்புச் சேலையைத் தளர்த்தி கொய்யகச் சுருக்குகளை வெளியே எடுத்து அவற்றில் செருப்புகளைப் பொதித்துச் சுருட்டி உள் பாவாடைக்குள் செருகி வயிற்றுக்கு நேரே இறக்கினாள் அவற்றை அணைத்துப் பிடித்தபடி படுத்துக் கொண்டாள். தயாளன் கண்களை நன்கு மூடிக் கொண்டான். மூடிய இமையோரத்தில் கண்ணீர் தேங்கியது.”


   இவ்வாறாக, குந்தவையின் ‘பாதுகை’ சிறுகதை மகனை இழந்துபோன ஒரு தாயின் மனவேதனைகளையும் ஏக்கங்களையும் உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்கிறது. இதனாற்தான் வெங்கட் சாமிநாதன் ‘தொடரும் உரையாடல்’ என்ற கட்டுரையில் “குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேஷமானவை. அவரது எழுத்தும் அலங்காரங்களோ உரத்த குரலோ ஆவேச உணர்வோ அற்றது. ஆனால் மிகுந்த தேர்ச்சி பெற்ற எழுத்து.” எனக் குறிப்பிடுகிறார்.

   இச்சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு நண்பர் மதிசுதா ‘பாதுகை’ என்ற குறும்படத்தை எடுத்துள்ளார். அக்குறும்படத்தில் குறித்த உணர்பூர்வமான இக்காட்சி அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இச்சிறுகதை சிங்களத்திலும் மொழிபெயர்ப்புக்குத் தேர்வாகியுள்ளது என்பதும் மேலதிக தகவல்கள் ஆகும்.

Thanks : Puthuvithi 15.12.2018
---