நவம்பர் 07, 2023

வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப்பிரதிகள் : பன்முகப் பார்வை



(இவ்வருடம் (2023) வெளிவந்துள்ள எனது இரண்டு புதிய நூல்களில் இதுவுமொன்று. நூல் தொடர்பாக நண்பர் கு. றஜீபன் எழுதிய வாழ்த்துக் குறிப்பினை இணைத்துள்ளேன்.- சு. குணேஸ்வரன் )

தமிழியல் ஆய்வு நடுவகத்தால் "சமகால இலக்கிய முயற்சிகள்" எனும் தலைப்பில் இந்த ஆண்டு ஒர் ஆய்வரங்கு நடாத்தப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு அம்மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வாக அது நடாத்தப்பட்டது. அதில் கலாநிதி சு.குணேஸ்வரன் அவர்கள் வல்லிபுரம் எழுமலைப்பிள்ளையின் படைப்புகள் பற்றிய ஆய்வினை சமர்ப்பித்திருந்தார்.

ஏழுமலைப்பிள்ளையவர்கள் யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வாழ்விடமாகவும் கொண்ட ஒரு கலைஞர். 2010 ஆம் ஆண்டு எனது முதல் நியமனத்தில் கிளிநொச்சியில் உள்ள கரைச்சி பிரதேச செயலகத்தில் கலாசார உத்தியோகத்தராகக் கடமை ஏற்றபோது அறிமுகமானவர்தான் ஏழுமலைப்பிள்ளை. அமைதியான சுபாவமுடைய ஒரு கலைஞராகவே எனக்கு அறிமுகமானார். பின்னர் அவருடனான உரையாடல் மூலம் அவரது வாசிப்புப் பழக்கத்தினையும் அவரது வசன ஒழுங்குகளையும் கண்டு அதிசயித்தேன்.
அப்போது அவர் எழுதிய சில நாடகப்பிரதிகளை எனக்குக் காண்பித்தார். நல்ல மொழிநடையாக இருந்த அந்த நாடகப்பிரதிகளை ஒரு நூலாக வெளியிடவேண்டும் என்ற சிந்தனையை முன்வைத்தேன். பொருளாதாரம் அவருக்கு இடந்தராமையினை அறிந்து எமது திணைக்கள நிதியிலும் நலன் விரும்பிகளின் அநுசரணையிலும் அவரது முதலாவது நூலை வெளிக்கொணர்ந்தேன்.
நல்ல எழுத்தாற்றல் அவரிடம் இருப்பதைக் கண்டு தொடர்ந்து எழுதும்படி தூண்டினேன். அவரும் ஆர்வங்கொண்டு தொடர்ந்து எழுதினார். நான் பணியாற்றிய காலத்தில் அவரது மூன்று நூல்களை வெளியிட்டு வைத்திருக்கின்றேன். ஏழுமலைப்பிள்ளையின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததோடு அவரது நூல்களுக்கு மாகாண, தேசிய மட்டத்தில் சிறந்த நூலுக்கான பரிசில்களும் கிடைத்தன. நான் பணியாற்றிய காலத்தில் இலைமறைகாயாக இருந்த ஒர் எழுத்தாளனுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கி அவரை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறேன் என்ற பெருமை எனக்கு இருந்தாலும் மனதில் ஒரு குறை இருந்தது. இன்று ஐந்து நூல்களுக்கு மேல் ஆக்கியிருக்கும் இவரது படைப்புக்களை ஆய்வுக்கு உட்படுத்தி ஒர் ஆய்வாளனின் அங்கீகாரத்தினைப் பெறவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனை தமிழியல் ஆய்வு நடுவகம் ஊடாக நிறைவேற்ற முடிந்தது.
ஒரு நல்ல ஆய்வாளன் ஊடாக இவரது படைப்புக்களை அணுகவேண்டும் என்று சிந்தித்தபோது பலரும் கூறிய ஆய்வாளர்தான் கலாநிதி சு.குணேஸ்வரன். எமது ஆய்வு மற்றும் மதிப்பீட்டுக்குழுவின் தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும் குணேஸ்வரனின் பெயரினையே முன்மொழிந்திருந்தார். அதற்கமைவாக சுமார் இரண்டு மாதகால அவகாசத்தில் இந்த ஆய்வினை மேற்கொள்ளும் பொறுப்பு குணேஸ்வரனுக்கு வழங்கப்பட்டபோது முதலில் தயங்கி, பின்னர் ஏற்றுக்கொண்டார்.
ஒர் ஆய்வாளன், படைப்பாளன் பற்றியும் அவரது படைப்புக்கள் பற்றியும் ஏலவே படித்திருந்த பின்பே ஆய்வினை மேற்கொள்வான். ஆனால் நான் இந்த ஆய்வுப் பொறுப்பினை குணேஸ்வரனிடம் வழங்கியபோது அவர் படைப்பாளன் பற்றியோ அவரது படைப்புக்கள் பற்றியோ அறிந்திருக்கவில்லை. அத்துடன் குணேஸ்வரனுக்கு இதுவொரு புதிய துறையாகவும் இருந்தது. நாடக எழுத்துரு மற்றும் ஆன்மீகம் என்ற துறைகளிலேயே ஆய்வுசெய்யவேண்டியிருந்தது. இந்தச் சவாலை துணிவுடன் ஏற்றுக்கொண்டு சிறந்தவொரு ஆய்வுக்கட்டுரையினை மாநாட்டில் சமர்ப்பித்திருந்தார். இப்போது அது நூலுருவாக வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது.
ஒர் ஆய்வு மூலையில் முடங்காமல் அது வாசகர் மத்தியில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் குணேஸ்வரன் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
சைவப்புலவர் கு.றஐீபன் M.A
நிறைவேற்றுப் பணிப்பாளர்,
தமிழியல் ஆய்வு நடுவகம்,
யாழ்ப்பாணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக