ஜனவரி 21, 2012

கதை கதையாம்…




(தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்)
- தொகுப்பு சு.குணேஸ்வரன்

கதை கதையாம்… (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) எனது பெரியதாயார் இளையகுட்டி அருமைக்கிளி அவர்களின் 31 வது நினைவுநாள் வெளியீடாக நான் தொகுத்துத்தரும் நூல் இது. இந்நூலில் செம்பியன் செல்வன், சாந்தன், காசி ஆனந்தன், எஸ்.பொ, எஸ்.ராமகிருஸ்ணன் ஆகியோரின் 28 குறுங்கதைகள் உள்ளன. இணைய வாசக நண்பர்களுக்கு அன்றையதினம் மின்நூலாகத்தரும் திட்டமும் உள்ளது. - சு.குணேஸ்வரன்

தொகுப்பிலிருந்து இரண்டு கதைகள்...
1. தீர்வு

“மதில் கரையோட நிக்கிற பப்பாசி மரத்தில, ஒரு பழமும் மிஞ்சுதில்லை…”

“ஏன்?”

“றோட்டுக்கு அந்தப் பக்கமிருக்கிற பட்டினிப் பட்டாளங்களெல்லாம், ஆக்களில்லாத நேரம் பார்த்து மதிலிலை ஏறி> எல்லாத்தையும் பிடுங்கிக் கொண்டு போடுதுகள்.”

“அந்த மரத்தை வெட்டி விடுங்கோ, தொல்லை இல்லை!”

- சாந்தன்-



2.இடம்

கழுதையும் பட்டாம்பூச்சியும் உலாப்போயின.

மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

‘இந்த இடத்தில் நான் இசைக்கச்சேரி வைப்பேன். இங்கே எனக்கு வரவேற்பிருக்கும்…’ என்றது கழுதை.

அது பாடத் தொடங்கியது.

என்ன கொடுமை… கழுதைக் கச்சேரி- கல்வீச்சு கலாட்டா என்று ஆகியது.

அடிபட்ட கழுதையும் பட்டாம்பூச்சியும் ஊரின் எல்லையில் சாய்ந்து கிடந்த ஒரு குச்சி வேலியின் அருகில் வந்து சேர்ந்தன.

கழுதைக்கு ஒரே கொண்டாட்டம்.

ஓணான்கள் வரிசையாக அங்கே வேலியில் உட்கார்ந்து தலையை ஆட்டிக் கொண்டிருந்தன. கழுதை மகிழ்ச்சியோடு பாடத் தொடங்கியது.

என்ன ஆச்சரியம்!

தலையை ஆட்டி எல்லோரும் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

வியப்போடு அசைவற்று நின்ற பட்டாம்பூச்சியைப் பார்த்து ஒரு வண்டு ‘ஒன்றும் வியப்படையாதே… இங்கே அப்படித்தான்’ என்று கூறியது.

சுருக்கமாக அது சொன்னது-

‘ஓணான்களின் ஊரில்
கழுதைகளும் வித்துவான்களே!’

- காசி ஆனந்தன்-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக